1509. வட்ட மதிபோல் அழகொழுகும்
வதன விடங்கர் ஒற்றிதனில்
நட்ட நவில்வார் அவர்முன்போய்
நாராய் நின்று நவிற்றாயோ
கட்ட அவிழ்ந்த குழல்முடியாள்
கடுகி விழுந்த கலைபுனையாள்
முட்ட விலங்கு முலையினையும்
மூடாள் மதனை முனிந்தென்றே.
உரை: வட்டமான முழுமதி போன்று அழகொழுக விளங்கும் திருமுகத்தையுடைய விடங்கரும், திருவொற்றியூர்த் திருக்கோயில் அம்பலத்தில் ஆடல் புரிபவருமான தியாகப் பெருமான் திருமுன்பு நின்று, நாரையே, கட்டியும் தானே அவிழ்ந்து வீழ்ந்த கூந்தலை முடியிடுவதின்றியும், நெகிழ்ந்து சரியும் ஆடையைக் கட்டிக் கொள்வதின்றியும், முழுதும் விலகித்தோன்றும் கொங்கையை மேலாடையால் மூடுவதின்றியும், மன்மதனை வெறுத்த வுள்ளத்துடன் இருக்கின்றாளென்று விளம்புவாயா? எ.று.
முழு மதியம் வட்ட வடிவிற்றாதலால், “வட்ட மதிபோல் அழகொழுகும் வதனவிடங்கர்” எனக் கூறுகின்றார். வதனம் - முகம். விடங்கர் - சுயம்பு மூர்த்தி. நட்டம் நவில்வார் - திருக்கூத்து இயற்றுகின்றவர். அவிழ்ந்து வீழ்ந்த கூந்தலை அலையவிடாமல் கட்டற்கு விரும்பாமல் அப்படியே விட்டொழிகின்றாள் என்றற்குக் “கட்ட அவிழ்ந்த குழல் முடியாள்” என்றும், உடை நெகிழுமாயின் உடனே கீழ் நோக்கி வீழுமாகலின், அதனையும் உடனே தடுத்து உடுக்க மறுக்கின்றாள் என்பது தோன்றக் “கடுகி வீழ்ந்த கலைபுனையாள்” என்றும் கூறுகின்றாள். கலை - இடையில் உடுக்கும் சீலை. “புனையாள்” என்றது, நன்கு திருத்தமாக உடுக்காமல் அலங்கோலமாக அணிகின்றாள் என்பதற்கு. முற்ற விலகும் என்பது, முட்ட விலங்கும் என வந்தது; முட்டுதற்கு வரும் யானைக் கொம்புபோலத் தோன்றும் எனினுமாம். இளமகளிர் முலை தோன்ற விடாராக, அதனை நினைந்திலள் என்பதாம். முனிதல் - வெறுத்தல்; சினத்தலுமாம். மதன் - மன்மதன். 'நாராய், முன் போய் நின்று, என்று நவிற்றாயோ' என வினை முடிவு செய்க. (7)
|