10. கருணை மாலை

        கருணை மாலை யென்பது தணிகை முருகனது அருள் வேண்டிப் பாடிய சொல்மாலை என்பதாம். திருவருளின் சிறப்பும் அஃது எய்திய வழி யுளதாகும் நலமும் அந்தாதித் தொடையில் தொடுத்துக் கூறப்படுகின்றன.

கலி விருத்தம்

151.

    சங்க பாணியைச் சது முகத்தனை
    செங்க ணாயிரத் தேவர் நாதனை
    மங்கலம் பெற வைத்த வள்ளலே
    தங்கருள் திருத் தணிகை யையனே.

உரை:

     திருத்தணிகையில் எழுந்தருளும் ஐயனே, சங்கேந்தும் கையை யுடைய திருமாலையும் நான்முகப் பிரமனையும் ஆயிரம் கண்ணை யுடையவனாகிய இந்திரனையும் தங்கள் பதங்களில் இனிதிருக்கச் செய்த வள்ளலாகிய முருகப் பெருமானே, நின்பால் நிறைந்திருக்கும் திருவருளைப் புரிக, எ. று.

     சங்க பாணி - சங்கினைக் கையிலே யுடையவன். இது பற்றியே, “சங்கேந்து மலர்க் குடங்கைப் புத்தேள்” எனச் சிவஞான முனிவர் கூறுகின்றார். திருமழிசைப் பிரான் “சங்குதங்கு முன்கை” (சந்த. 57) என்று திருமாலின் கையைச் சிறப்பிப்பர். இதனைப் பாஞ்ச சன்னியம் என்று பெரியாழ்வார் பெயர் குறிப்பர். சதுர்முகன் எனற்பாலது சது முகத்தன் என வந்தது. சதுர், நான்கென்னும் எண்ணின் பெயர். கண்கள் ஆயிர முடையவன் இந்திரன். இவன் தேவர்கட் கரசனாவது பற்றித் “தேவர் நாதன்” என்கின்றார். தத்தம் பதங்களை அசுரர்களால் இழவா வண்ணம் காத்தருளுவது பற்றி, “மங்கலம் பெறவைத்த வள்ளலே” என்று முருகக் கடவுளைப் புகழ்கின்றார். தடையின்றி அருளின்மை புலப்படத் “தங்கருள்” எனக் கூறுகின்றார்.

     இதனால் தேவர்கட்கு முருகன் காப்பருளிய திறம் கூறி அருள் செய்ய வேண்டியவாறு.

     (1)