1510. வேலை விடத்தை மிடற்றணிந்த
வெண்ணீற் றழகர் விண்ணளவும்
சோலை மருவும் ஒற்றியிற்போய்ச்
சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
மாலை மனத்தாள் கற்பகப்பூ
மாலை தரினும் வாங்குகிலாள்
காலை அறியாள் பகல்அறியாள்
கங்குல் அறியாள் கனிந்தென்றே.
உரை: கிளிகளே, கடல் விடத்தைக் கழுத்திற் கொண்டவரும், வெண்மையான திருநீற்றை மேனியில் அணிந்த அழகுடையவருமான தியாகப் பெருமானுடைய வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூர்க்குப் போய், அவன் திருமுன்படைந்து, மயங்கிய மனமுடையவளாய், கற்பக மரத்தின் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை கொணர்ந்து தந்தாலும் வாங்காத வெறுப்புடையவளாய், காலை நண்பகல் இரவு என்ற பொழுதுகளையும் எண்ணாதவளாய் மனம் குழைந்து மெலிகின்றாளென்று சொல்லுவீர்களா? எ.று.
வேலைவிடம் - கடலிற் பிறந்த நஞ்சு. மிடறு - கழுத்து. 'சோலை விண்ணளவு மருவும்' என இயையும். சுகம் - கிளி. மாலை மனம் - காம மயக்குற்ற மனம். கற்பகப் 'பூ - தேவருலகத்து இந்திரன் நகரத்துப் பூங்காவில் மலர்வது; அதனை மண்ணுலகத்துக்குக் கொணர்வது அரிது. அரிது முயன்று கொணர்ந்து தரினும், அதனை யணிந்தாலும் தன் மனம் கவர்ந்த தியாகப் பெருமான் வந்து கண்டு மகிழ்பவராக இல்லையென்று ஊடிய கருத்தால் மறுக்கின்றாள் என்பது தோன்ற, “கற்பகப் பூமாலை தரினும் வாங்குகிலாள்” என்றும், பொழுதுகள் வேறுபடினும் வேட்கை மயக்கம் வேறுபடாது மனம் கனிந்து வேதனை யுறுகின்றாள் என்பாள், “காலை யறியாள் பகலறியாள் கங்குலறியாள் கனிந்து” என்றும் உரைக்கின்றாள். மாலை - ஈண்டு நண்பகல் மேற்று; அந்திமாலையுமாம் 'சுகங்காள் போய் அவர்முன், என்று சொல்லீரோ' என வினை முடிவு செய்க. (8)
|