1512. தேசு பூத்த வடிவழகர்
திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
தூசு பூத்த கீளுடையார்
சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
மாசு பூத்த மணிபோல
வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
ஏசு பூத்த அலர்க்கொடியாய்
இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.
உரை: கிளிகளே, ஒளி திகழும் வடிவால் அழகுடையவரும், திருமகள் தங்கும் ஒற்றியூர்த் தேவர் பெருமானும், புலித்தோ லுடையும் கீளுடையும் உடையவருமான தியாகப் பெருமான் கோயிலையடைந்து அவர் திருமுன்னிருந்து, எமது தலைவியாகிய நங்கை, மாசு படிந்த மாணிக்க மணிபோலவும், ஏனை மகளிரின் வாயால் ஏச்சுண்ட மலர்க் கொடி போலவும், உம்மை நினைந்து நினைந்து மெலிந்து விட்டாள் என்று சொல்லுவீர்களாக. எ.று.
தேசு - ஒளி. சிவபெருமானுடைய திருவடிவம் சோதியுட் சோதியாய்த் திகழ்வதாகலின், “தேசு பூத்த வடிவழகர்” என்று சிறப்பிக்கின்றார். “சோதியந்தமாயினாய் சோதியுள்ளோர் சோதியாய்” (ஆலவா) என்று ஞானசம்பந்தர் பாடிப் பரவுவது காண்க. பொன்னும் பொருளும் மிக்கு விளங்குதலால், காரணமான திருமகள் வாழ்வு பெறப்படுவது கண்டு, “திருவாழ் ஒற்றி” என்று சிறப்பிக்கின்றார். நூலாற் கீளுடையும் புலித்தோலால் இடையாடையும் உடைமை பற்றி, “புலித் தூசு பூத்த கீளுடையார்” என வுரைக்கின்றார் புலித்தூசு பூத்த கீளுடையார் என்பது, புலித்தோல் பூத்த உடையும், தூசு பூத்த கீளும் உடையார் என விரியும். கீள் - நூலாடையினின்றும் கிழித்து அரை நாணாக இடையிற் கட்டுவது. தூசினால் ஆகியதுபோல் தோலால் ஆகிய கீள் அணியும் உடற்கு நலம் செய்வதில்லை எனக் கீளணியும் சான்றோர் கூறுகின்றனர். “கீளலால் உடையுமில்லை” (ஐயாறு) என நாவுக்கரசர் நவில்வது காண்க. நீராடலின்றி நிலத்திற் கிடக்கின்றமையால் செம்மேனி மாசு படிந்திருத்தல் விளங்க, “மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள்” எனவும், மனை மகளிரும் அயல் மகளிரும் பல சொல்லியும் தெளிவுறாமை கண்டு சினமுற்று ஏசுகின்றாராகலின். “மங்கையர் வாய் ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தனள்” எனவும் உரைக்கின்றாள். “மாசுண்ட மணியனாள்” (சுந்தர) எனக் கம்பர் உரைப்பது காண்க. 'சுகங்காள், அவர்முன், என்று சொல்லீரோ' என வினை முடிவு செய்க. (10)
|