79. இரங்கன் மாலை

தலைவி இரங்கல்

திருவொற்றியூர்

    அஃதாவது கூட்டம் பெறாத தலைவி காதல்மிகுதலால் கையறவுற்றுத் தன் தோழியிடம் தன் மனக்குறையை நாணுவரை யிறந்து கூறிக் கொள்ளுதல். இதனைப் 'புறஞ்சொல் மாணாக் கிளவி' எனச் சான்றோர் கூறுவர். தலைவி, பெருந்திணைத் தலைவி. மாலை யிட்டமை யுரைத்தலால் இது கைக்கிளை யாகாமை யறிக. தலைவி இரங்கிக்கூறுதல் பொருளாகப் பாட்டுக்கள் முப்பத்தொன்று அமைந்திருத்தலால், இரங்கன் மாலை எனப் படுகிறது. தலைவி இரங்கல் என்பது கூற்று விளக்கம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1513.

     நன்று புரிவார் திருவொற்றி
          நாதர் எனது நாயகனார்
     மன்றுள் அமர்வார் மால்விடைமேல்
          வருவார் அவரை மாலையிட்ட
     அன்று முதலாய் இன்றளவும்
          அந்தோ சற்றும் அணைந்தறியேன்
     குன்று நிகர்பூண் முலையாய்என்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      மலை போற் குவிந்த பூணாரமணிந்த முலையையுடைய என் தோழி, திருவொற்றியூர்க்குத் தலைவரும் என்னுடைய நாயகனுமாகிய சிவபெருமான், எவர்க்கும் எப்போதும் அறத்தையே விரும்பிச் செய்வதும், தில்லையம்பலத்தில் விரும்பி யுறைவதும், திருமாலாகிய எருதினை யூர்வதும் இயல்பாக வுடையவர்; அவர் என்னை மணந்து மாலையிட்ட அந்நாள் முதல் இன்று வரையும், ஐயோ, சிறிது போதும் என் பக்கல் வந்து என்னைக் கூடுகின்றாரில்லை; என் மனக்குறையை நினக்கல்லது வேறே எவர்க்கு உரைப்பேன். எ.று.

     திருவொற்றியூர்க்கண் கோயில் கொண்டு எழுந்தருளி உலகுயிரனைத்திற்கும் அருளாட்சி புரிதல் பற்றிச் சிவபெருமானை, “திருவொற்றிநாதர்” என்று தலைவி இயம்புகின்றாள். சிவனுக்கும் தனக்குமுள்ள தொடர்புணர்த்தற்கு “எனது நாயகனார்” எனக் கூறுகின்றாள். அருளற வடிவும் செயலும் உடைமை விளங்க, “நன்று புரிவார்” என்கின்றார். உயிர்கள் மலவாதனையின் நீங்கி ஞானமும் இன்பமும் பெறற்பொருட்டு அம்பலத்தில் விருப்புடன் எழுந்தருளித் திருநடம் புரிபவராதலால், “மன்றுள் அமர்வார்” எனவும், அவர் ஊர்வது திருமாலாகிய பெரிய எருதாகலின், “மால்விடை மேல் வருவார்” எனவும் இசைக்கின்றார். உண்மை யன்பர்க்கு அருள் புரியுமிடத்து எருதின் மேல் இவர்ந்து போந்து காட்சி தருவது பற்றி “விடை மேல் வருவார்” என்று கூறுகின்றாள் எனினும் அமையும். அன்புற்று அவரைத் தலைவராக ஏற்ற நாள் முதல் இன்றுவரையிற் கூடி யின்புற்றிலேன் எனக் கவல்கின்றாளாதலால் “அவரை மாலையிட்ட அன்று முதலாய் இன்றளவும் சற்றும் அணைந்தறியேன்” என வுரைக்கின்றாள். அன்றுமுதல் இன்றுவரை என்ற போது துயரம் மீதூரவும் “அந்தோ” எனக் கதறுகின்றாள். காதல் உணர்வு மிகுதியால் எய்தும் துயரம் கூட்டத்தாலன்றித் தீராமை பற்றி, “அணைந்தறியேன்” என அவலிக்கின்றாள். மிக்க காமத்து மிடலுற்று உரையாடுதலின், தோழியை, “குன்று நிகர் பூண் முலையாய்” எனக் கூறுகிறாள். குறை யுடையவர், உரியவர் எவர்க்கேனும் உரைத்தே தமது குறையால் உளதாகும் மனநோயை ஆற்றிக் கோடல் இயல்பாதலின், “என் குறையை எவர்க்குக் கூறுவனே” என்று இயம்புகின்றாள். காதல்நோய் உயிர்த் தோழிக்கல்லது உரைக்கப்படுவதில்லாமை பற்றி, “எவர்க்குக் கூறுவன்” என்கின்றாள்.

     இதனால், காமநோய் மிக்குக் கையறும் தலைவி, தன்னுடைய உயிர்த் தோழிக்குரைத்து அயா வுயிர்த்தவாறாம். ஏனைப் பாட்டுக்கட்கும் இதுவே கருத்தெனக் கொள்க.

     (1)