1515.

     தோடார் குழையார் ஒற்றியினார்
          தூயர்க் கலது சுகம்அருள
     நாடார் அவர்க்கு மாலையிட்ட
          நாளே முதல்இந் நாள்அளவும்
     சூடா மலர்போல் இருந்ததல்லால்
          சுகமோர் அணுவுந் துய்த்தறியேன்
     கோடா ஒல்குங் கொடியேஎன்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      பூங்கொம்பு போல் அசைகின்ற கொடி நிகர்த்த தோழி, தோடும் குழையும் அணிந்தவரும், திருவொற்றியூரையுடையவரும், தூய மனமுடைய மெய்யன்பர்க்கன்றித் தமது சிவபோகத்தை யருள விரும்பாதவருமாகிய சிவபெருமானுக்கு, நான் மாலையிட்ட அன்று முதல் இன்று வரையும் அணியாத பூவைப்போல இருந்தொழிந்தேனே யன்றி, ஒரு சுகமும் சிறிதும் நுகர்ந் தறியேன்; எனது இக்குறையை எவர்க்கு உரைப்பேன், கூறுக. எ.று.

     கோடு - பூங்கொம்பு. ஒல்குதல் - அசைதல். கொடி போலும் இடையையுடைய பெண்ணைக் கொடி யென்னும் வழக்குப் பற்றி, “கொடியே” எனத் தோழியைக் கூறுகின்றாள். தோடு - இடக் காதில் அணிவது, குழை - வலக்காதில் அணியும் அணிவகை. தோடு இலை போன்றும், குழை வட்டமாகவும் இருக்கும். “தோடொரு காது ஒரு காது சேர்ந்த குழையான்” (நாரை) எனத் திருஞானசம்பந்தர் கூறுவது காண்க. இயல்பாகவே மல முதலிய பாசக் கலப்பில்லாத தூயனாதலின், சிவபிரான் மனம் தூயராகிய மெய்யன்பரையே நாடி யருள்புரிவது பற்றி, “தூயர்க்கலது சுகமருள நாடார்” என நவில்கின்றார். கூந்தலிற் சூடிக்கொள்ளாமல் செப்பில் அடைத்து வைத்த பூ வாடுவது போல் யானும் இல்லின்கண் அடைபட்டு வாடுகின்றேன் என்பாள், “சூடா மலர் போல் இருந்த தல்லால் சுகமோ ரணுவும் துய்த்தறியேன்” என்று உரைக்கின்றாள். “பெய்யாது வைகிய கோதை போல, மெய் சாயினை” (நற். 11) எனவும், “மடைமாண் செப்பின் தமிய வைகிய பெய்யாப் பூவின் மெய் சாயினளே (நறுந். 9) எனவும் சான்றோர் உரைப்பன காண்க. போகம் பெறாமையின் மேனி வாடிய தென்பது கருத்து.

     (3)