1516. அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார்
அணியார் ஒற்றி யார்நீல
கண்டர் அவர்க்கு மாலையிட்ட
கடனே அன்றி மற்றவரால்
பண்டம் அறியேன் பலன்அறியேன்
பரிவோ டணையப் பார்த்தறியேன்
கொண்டன் மணக்குங் கோதாய்என்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: குருக்கத்தி மலரின் மணம் கமழும் மாலையணிந்த தோழி, தேவர்கள் எவராலும் அறிய வொண்ணாதவரும், அழகு பொருந்திய திருவொற்றியூரை யுடையவரும், நீல நிறமுடைய கழுத்தை யுடையவருமாகிய சிவபெருமானுக்கு மாலையணியும் கடனைச் செய்தேனே யன்றி, அவரால் நான் ஒரு நன்பொருளும் போகப்பயனும் பெற்றிலேன்; அவரேனும் போந்து அன்போடு என்னைக் கூடியதும் இல்லேன்; எனது இக்குறையை நினக்கல்லது வேறே எவர்க்குக் கூறுவேன். எ.று.
கொண்டல் - குருக்கத்தி; கீழ்க் காற்று வீசுங் காலத்து மலர்வதுபற்றிக் கொண்டல் எனப்படுகிறது. தமிழ் நூலோர் இதனை 'மாதவி' எனபர். கோதை - மாலை; பெண்ணுக்கும் இது பெயராதல் உண்டு. அண்டர் - தேவர். தேவர்கள் போகிகளாதலால் ஞானப்பேறு அரிதாதல் பற்றி, “அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார்” என்று கூறுகிறாள். அணி - ஈண்டு இயற்கை வளத்தால் உளதாகும் அழகு. விடமுண்டதனால் கழுத்துக் கரிதானது பற்றிச் சிவனை நீலகண்டர் என வழங்குகின்றனர். கடன் - இங்கே கடமைப் பொருள்பட வந்தது. பண்டம் - கைம்மேற் பொருள். பலன் - சிவபோகப் பயன். போக நுகர்வு அணைதலால் எய்துவதாகலின், “பரிவோடு அணையப் பார்த்தறியேன்” எனப் பகர்கின்றாள். மாலையிட்ட கடனைச் செய்த்தன்றிக் கூடி மகிழப் பெற்றிலேன் என்பது கருத்து. (4)
|