1517.

     பாடல் கமழும் பதம்உடையார்
          பணைசேர் ஒற்றிப் பதிஉடையார்
     வாடல் எனவே மாலையிட்ட
          மாண்பே அன்றி மற்றவரால்
     ஆடல் அளிசூழ் குழலாய்உன்
          ஆணை ஒன்றும் அறியனடி
     கூடல் பெறவே வருந்துகின்றேன்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      பறத்தலையுடைய வண்டினம் மொய்க்கும் கூந்தலையுடைய தோழி, மெய்யன்பர்களின் பாடற் பொருளாகும் திருவடியை யுடையவரும், மருத வயல்கள் பொருந்திய திருவொற்றியூரைத் தமக்கு இடமாக வுடையவருமான சிவபெருமான், வாட்டம் ஒழிக என்று எனக்கு மாலையிட்டு மாண்பு செய்தாரே யன்றி, மற்று, உனது ஆணையாகச் சொல்லுகிறேன், அவர்பாற் சுகம் ஒன்றும் அறியேன்; அவரது கூட்டம் பெற வேண்டி வருந்தி மெலிகின்றேன்; இந்தக் குறையை வேறே எவரிடம் சொல்லுவேன். எ.று.

     சிறகடித்துப் பறக்கும் வண்டின் செயலை விதந்து, “ஆடல் அளி” எனக் கூறுகிறார். குழல் - கூந்தல். பாடல் - மெய்யன்பர்களான ஞானசம்பந்தர், நாவுக்கரசர், நம்பியாரூரர் முதலியோர்களின் பண் சுமந்த பாடல். பாடல் - பாதிரி மலருமாம். பதம் - திருவடி. பணை - மருதவயல். காதல் கைம்மிக்கு மேனி வாடியது கொண்டு எனக்கு மாலையிட்டு மகிழ்வித்தார் என்பாளாய், “வாட லெனவே மாலையிட்ட மாண்பு” என்றும், வேறே அவரை மெய்யுறக் கூடி இன்புற்றிலேன் என்பாளாய், “மற்றவரால் ஒன்றும் அறியனடி” என்றும் சொல்லுகிறாள். தனது சொல்லின் மெய்ம்மை புலப்படுத்தற்கு “உன்னாணை” என்கின்றாள். அறியேன் அடி என்பது உலக வழக்காய் மருவி “அறியனடி” என வந்தது. 'அறியேன்' என, என்னீற்றுத் தன்மை வினையாக் கொள்ளினுமாம். மெய் தொட்டு மாலையிடுவதும் மெய்யுறு புணர்ச்சியெனினும் ஒன்றிக் கூடிப் போக நுகரும் கூட்டத்தைப் பெற விரும்பி மெலிகின்றேன் என்பாளாய், “கூடல் பெறவே வருந்துகின்றேன்” எனவும், பிறர்க்கு வாய் விட்டுரைத்தல் கூடாமையால், “குறையை யெவர்க்குக் கூறுவனே” எனவும் எடுத்துரைக்கின்றாள். சிவபோக விழைவு பெருகினமை தெரிவிப்பது கருத்தென அறிக.

     (5)