1519. ஒற்றி நகர்வாழ் உத்தமனார்
உயர்மால் விடையார் உடையார்தாம்
பற்றி என்னை மாலையிட்ட
பரிசே அன்றிப் பகைதெரிந்து
வெற்றி மதனன் வீறடங்க
மேவி அணைந்தார் அல்லரடி
குற்றம் அணுவும் செய்தறியேன்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: தோழி, திருவொற்றியூராகிய நகரின்கண் எழுந்தருளும் உத்தமனும், உயர்ந்த திருமாலாகிய விடையை யுடையவரும், எல்லா வுலகங்களையும் தமக்கு உடைமையாக வுடையவருமான சிவபெருமான், என் கையைப் பற்றி எனக்கு மணமாலை அணிந்த அச்செயலை யன்றி, வெற்றியையுடைய காமவேளின் பகையாம் தன்மையை யெண்ணி, அவனது செருக்குக் கெடுமாறு என்பால் வந்து என்னைக் கூடி இன்புறுத்தினாரில்லை; யானும் ஒரு அணுத்துணையும் அவர்க்குக் குற்றம் செய்யவில்லை; எனது இக்குறையை உன்பாலன்றி வேறே எவரிடம் கூறுவேன். எ.று.
ஒற்றி நகர் - திருவொற்றியூர். நகர் - கோயிலுமாம். தேவ தேவனாதல் பற்றித் திருமாலை, “உயர்மால்” எனச் சிறப்பிக்கின்றார். விடை - எருது; திருமாலாகிய விடை என்க. உடையார் எனப் பொதுப்படக் கூறினமையின், உடைமையாகிய உலகங்கள் பெய்துரைக்கப்பட்டன. பற்றப்படுவது கையாகலின், கை வருவிக்கப்பட்டது. பரிசு, ஈண்டுச் செயல் மேல் நின்றது. சிவன்பாற் பகைகொண்டு சிவனால் எரிக்கப்பட்ட வரலாறுபற்றி, “பகை தெரிந்து” என வுரைக்கின்றாள். தேவ தேவர்களையும் வென்றாளும் வன்மை யுடையவனாதலால் காமதேவனை, “வெற்றி மதனன்” என்று கூறுகிறாள். வீறு - செருக்கு. போக நுகர்ச்சி யால் வேட்கை தணிதலின், “வீறடங்க மேவியணைத்தாரல்லர்” எனப் பேசுகின்றாள். புணர்ச்சி யெய்தாக் குறை புகறற்பால தன்மை தோன்ற, “எவர்க்குக் கூறுவன்” என்று கூறுகிறாள். சிவபோகம் பெறாமைக்கு வருந்துவது கருத்து. (7)
|