1520. வானும் புவியும் புகழ்ஒற்றி
வாணர் மலர்க்கை மழுவினொடு
மானும் உடையார் என்றனக்கு
மாலை யிட்ட தொன்றல்லால்
நானும் அவருங் கூடியொரு
நாளும் கலந்த தில்லையடி
கோனுந் தியவேற் கண்ணாய்என்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: அம்பின் கூர்மையும் வேலின் வடிவமுடைய கண் பொருந்திய தோழி, விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் சேரப் புகழ்கின்ற திருவொற்றியூரில் எழுந்தருள்பவரும், மலர் போன்ற கையின் கண் மழுப்படையும் மானும் உடையவருமாகிய சிவபெருமான், என்னை மணந்து மாலையிட்டதுண்டேயன்றி, நானும் அவரும் ஒருநாளும் கூடிக் கலந்து இன்புற்றதில்லை; இந்த என் குறையை யார்க்குக் கூறுவேன். எ.று.
கோல் - அம்பு. நுந்துதல் - ஒத்தல். கூர்மையால் அம்பும் வடிவால் வேலும் கண்கட்கு உவமமாயின. வான் - விண்ணுலகம். புவி - மண்ணுலகம்; ஆகு பெயர். வாழ்நர் - வாணர் என மருவிற்று. ஒரு கையில் மழுவும் ஒரு கையில் மானும் ஏந்துதலால், சிவனை, “மலர்க்கை மழுவினொடு மானுமுடையார்” எனச் சிறப்பிக்கின்றாள். மணந்து மாலையிட்ட துண்டேயன்றி மருவியதில்லை என்பாள், “மாலையிட்ட தொன்றல்லால் நானும் அவரும் கூடி யொருநாளும் கலந்ததில்லை” என்றும், இது பிறரறியக் கூறத் தகுவதன்றாகலின், “குறையை எவர்க்குக் கூறுவனே” என்றும் இசைக்கின்றாள். சிவபோகப்பேறு பெறவில்லை என்பது கருத்து. (8)
|