1521.

     தெறித்து மணிகள் அலைசிறக்கும்
          திருவாழ் ஒற்றித் தேவர்எனை
     வறித்திங் கெளியேன் வருந்தாமல்
          மாலை யிட்ட நாள்அலது
     மறித்தும் ஒருநாள் வந்தென்னை
          மருவி அணைய நானறியேன்
     குறித்துங் குழன்றேன் மாதேஎன்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

     காதலன்புடைய தோழி, முத்து மணிகளைக் கரைக்கண் துள்ளி விழுமாறு எறியும் கடல் அலைகளாற் சிறப்புறும் திருவொற்றியூரின் கண் எழுந்தருளும் தேவதேவனாகிய சிவபெருமான், மணமின்றி வருந்தி ஒழியாதபடி இங்கே என்னை மாலையிட்டு மணந்த நாளன்றி, மறுபடியும் ஒருநாளேனும் வந்து என்னைக் கூடி யணைந்ததில்லை; கனவின்கண்ணும் அது நிகழ்ந்ததாக நான் அறிகிலேன்; அவரது சிவபோகம் கருதியே இவ்வுலகில் வருந்துகிறேன்; இந்த என் குறையை எவரிடம் கூறுவேன். எ.று.

      காதலன்புடைய மகளிரைக் குறிக்க மாது என்பது வழக்கு. 'மாதர் காதல்' என்பது தொல்காப்பியம். இளமகளிரை மாதர் எனப் பொதுப்பட மொழிவது பெருவழக்காகும். கடல் அலைகள் கரையோடு மோதுங்கால் முத்து மணிகள் தெறித்துச் சிதறுவது கண்டு, “தெறித்து மணிகள் அலை சிறக்கும் திருவாய் ஒற்றி” எனத் தெரிவிக்கின்றாள். செல்வ வளம் புலப்படத் “திருவாழ் ஒற்றி” என்கின்றாள். தேவ தேவனாதலால் சிவனைத் “தேவர்” என்று கூறுகிறாள். வறிது, வறித்தென வந்தது. மணமின்றி யிருத்தலை வறிதெனக் குறிக்கின்றாள். எளியனாதலால் இரக்கத்தால் என்னை மணந்தாரல்லது வேறில்லை என்பது குறிப்பு. அன்பால் மணந்திருப்பரேல் என்னைப் பின்னர்க் கூடியிருப்பர்; அஃது இல்லாமை தோன்ற “மறித்தும் ஒருநாள் வந்தென்னை மருவி அணைய நானறியேன்” என்று இசைக்கின்றாள். அணைந்திலரென்னாது “அணைய நானறியேன்” என்றதனால், கனவின் கண்ணும் சிவன் தோன்றிக் கூடிற்றிலன் என்பது பெறப்பட்டது. அது கருதியே நான் வாழ்கின்றே னென்பாள், “குறித்திங் குழன்றேன்” என்றும் இது பிறர்க்கு உரைத்தற்காகாமையின் “எவர்க்குக் கூறுவ”னென்றும் கூறுகின்றாள். இது சிவபோகம் பெறாமை கருத்து.

     (9)