1522. மின்னோ டொக்கும் வேணியினார்
விமலர் ஒற்றி வாணர்எனைத்
தென்னோ டொக்க மாலையிட்டுச்
சென்றார் பின்பு சேர்ந்தறியார்
என்னோ டொத்த பெண்களெல்லாம்
ஏசி நகைக்க இடருழந்தேன்
கொன்னோ டொத்த கண்ணாய்என்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: அச்சம் தரும் வேல் போன்ற கண்ணையுடைய தோழி, மின்னலைப்போல் ஒளிரும் சடையை யுடையவரும், தூயவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமாகிய சிவபெருமான், அழகு பொருந்த எனக்கு மாலையிட்டுச் சென்றார்; சென்றவர் பின்பு போந்து என்னைக் கூடவில்லை; என்னைப் போன்ற பெண்கள் எல்லாம் என்னை யிகழ்ந்து பேசுதலால் வருந்துகின்றேனாதலால் எனது இக்குறையை எவர்க்கு எடுத்துரைப்பேன், காண். எ.று.
கொன் - அச்சம்; ஆகுபெயராய் வேற்படைக்காயிற்று. மின் - வானத்திற் றோன்றும் மின்னற் கொடி; சிவனது முடிச்சடைக்கு இம் மின்னலைக் கூறுவது சான்றோர் மரபு. “மின்னேர் செஞ்சடையாய்” (மழபாடி) என நம்பியாரூரர் கூறுவர். வேணி - சடை. விமலர், மலக்கலப்பில்லாத தூயர். தென் - அழகு. சென்றவர் தன்னை விரும்பி நினைந்து வந்து கூடி மகிழ்வித்தாரில்லையென இரங்குவாளாய், “சென்றார் பின்பு சேர்ந்தறியார்” என்று செப்புகின்றாள். கணவனொடு கூடி வாழும் மணமங்கையர் என்றற்கு, “என்னோடொத்த பெண்களெல்லாம்” என்று கூறுகின்றாள். கணவனைக் காதலன்பால் வளைத்துப் பிணிக்கும் திறமையில்லாதவள் என எள்ளி நகையாடுகின்றனர் என்பாளாய், “ஏசி நகைக்க இடருழந்தேன்” என்றும், வாய்விட்டுரைப் பரிதாய குறையாதலின், “என் குறையை எவர்க்குக் கூறுவன்” என்றும் இசைக்கின்றாள். (10)
|