1523. உடுத்தும் அதளார் ஒற்றியினார்
உலகம் புகழும் உத்தமனார்
தொடுத்திங் கெனக்கு மாலையிட்ட
சுகமே அன்றி என்னுடனே
படுத்தும் அறியார் எனக்குரிய
பரிவிற் பொருள்ஓர் எள்ளளவும்
கொடுத்தும் அறியார் மாதேஎன்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: மாதே, தோலாடையை யுடுப்பவரும், திருவொற்றியூரவரும், உலகமெல்லாம் புகழ்ந்து போற்றும் உத்தமருமாகிய சிவ பெருமான், இங்கே போந்து பூக்களால் மாலை தொடுத்து எனக்கு அணிந்தபோது உண்டாகிய இன்பத்தையன்றி, என்னுடனே படுக்கையிற் கிடக்கும் சுகத்தைக் கண்டிலர்; அன்பினால் எனக் கென்றமைந்த பொருள்களில் ஒன்றும் எனக்கு அளித்திலர்; எனது இக்குறையை எவர்க்குக் கூறுவேன். எ.று.
அதள் - தோல்; ஈண்டுப் புலித்தோல்மேல் நின்றது. “கொல் புலித்தோல் நல்லாடை” (சாழல்) என்பது திருவாசகம். உத்தமன் - உயர்ந்தவன். பூக்களைத் தேர்ந்தெடுத்து மாலை தொடுப்பது அன்புடையார் செயலாதலின், “தொடுத்து மாலையிட்ட சுகம்” எனப்படுகிறது. மெய்யுறு புணர்ச்சி யின்பத்தைக் குறிப்பு மொழியால், “என்னுடனே படுத்து மறியார்” என்கின்றாள். காதலியின் விருப்பறிந்து, காதலர் அவர் விழைவனவற்றைக் கொணர்ந்தளிப்பது இயல்பாதலின், “பரிவிற் பொருளோர் எள்ளளவும் கொடுத்து மறியார்” என்று கூறிகிறாள். (11)
|