1524. உழைஒன் றணிகைத் தலம்உடையார்
ஒற்றி உடையார் என்றனக்கு
மழைஒன் றலர்பூ மாலையிட்டார்
மறித்தும் வந்தார் அல்லரடி
பிழைஒன் றறியேன் பெண்களெலாம்
பேசி நகைக்கப் பெற்றேன்காண்
குழைஒன் றியகண் மாதேஎன்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: குழை யணிந்த காதளவும் நீண்ட கண்ணையுடைய தோழி, மான் பொருந்திய அழகிய கையையுடையவரும், ஒற்றி நகரையுடைய தலைவருமாகிய சிவபெருமான், எனக்குக் குளிர்ச்சி பொருந்திய மலர் மாலையை யணிந்து விட்டுச் சென்றவர் மீட்டும் என்பால் வந்திலர்; நான் செய்த பிழை யாதென்றும் அறியேன்; என்போன்ற பெண்கள் எல்லாரும் கண்டு எள்ளி நகைக்கப் பெற்றேன்; எனது இக்குறையை நினக்கன்றி வேறே எவர்க்குக் கூறுவேன். எ.று.
குழை - காதிலணியும் அணிவகை. முனிவர்கள் யாகத்தில் எழுப்பி விடுத்த மானைக் கையில் ஏந்துதலால், “உழையொன்றணி கைத்தலமுடையார்” என வுரைக்கின்றாள். மழை - குளிர்ச்சி. மலர்மாலை - பூவாற்றொடுத்த மணமாலை. மறித்தும் - மீண்டும். மாலை யணிந்து விட்டுப் பிரிந்து சென்றவர் மீள வாராமைக்குக் காரணம், தன்பால் உளதாய பிழையாதல் வேண்டுமென எண்ணுகின்றாளாகலின், “பிழை யொன்றறியேன்” எனப் பேசுகின்றாள். கணவனொடு கூடி வாழாத பெண்களை ஏனைய பெண்கள் கண்டு இகழ்வது உலகியற்கையாதலால், “பெண்கள் எலாம் பேசி நகைக்கப் பெற்றேன் காண்” என்று உரைக்கின்றாள். (12)
|