1525. ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார்
என்கண் அனையார் என்தலைவர்
பீடார் மாலை இட்டதன்றிப்
பின்னோர் சுகமும் பெற்றறியேன்
வாடாக் காதற் பெண்களெலாம்
வலது பேச நின்றனடி
கோடார் கொங்கை மாதேஎன்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: யானையின் கோடுபோன்ற கொங்கையையுடைய தோழி, மலர் நிறைந்த சோலைகளையுடைய திருவொற்றியூரை யுடையவரும், என்னுடைய கண் போன்றவரும், எனக்குத் தலைவருமாகிய சிவ பெருமான், பெருமை பொருந்திய மாலையை எனக்கு அணிந்த சுகமன்றிப் பின்பு பெறற்குரிய சுகம் பெற்றறியேன்; காதலின்ப நுகர்ச்சி குன்றாத மகளிரெல்லாரும் வல்லாங்குப் பேச நின்றொழிந்தேன்; எனது இக் குறையை வேறே எவர்க்கு உரைப்பேன். எ.று.
கோடு - கொம்பு; ஈண்டு யானையின் கொம்பின் மேற்று. மகளிர் கொங்கைக்கு யானைக்கோட்டை உவமம் கூறுவது மரபு. ஏடு - பூவின் இதழ்; ஆகு பெயராய் மலர் குறித்தது. “கண்ணிற் சிறந்த உறுப்பில்லை” என்பதால், “என் கண் அனையார்” எனக் கூறுகின்றாள். திருமண மாலையாதலின், “பீடார் மாலை” எனச் சிறப்பிக்கின்றாள். பீடு - பெருமை. திருமணத்துக்குப் பின் மகளிர் கணவனொடு கூடிப் பெறும் இன்பம் ஈண்டுச் “சுகம்” எனப்படுகிறது. காதலின்பம் “புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய்ப் பெருகுவ” தாகலின் (திருக்கோ) அதனை நுகர்வது பற்றி, மணமான மகளிரை “வாடாக் காதற் பெண்கள்” எனக் கூறுகிறாள். வலது பேசல், இல்லாததெல்லாம் சொல்லுதல்; வல்லாங்குப் பேசுதல் எனப்படுவது; அஃதாவது இன்பக் களிப்பால் பெருமிதத்தோடு பேசுவதென அறிக. நின்றேனடி யென்பது, நின்றனடியென மருவியது உலக வழக்கு. 'அன்'பெறாத தன்மையொருமை வினையெனினுமாம். (13)
|