1526. கஞ்சன் அறியார் ஒற்றியினார்
கண்மூன் றுடையார் கனவினிலும்
வஞ்சம் அறியார் என்றனக்கு
மாலை இட்ட தொன்றல்லால்
மஞ்சம் அதனில் என்னோடு
மருவி இருக்க நான்அறியேன்
கொஞ்சம் மதிநேர் நுதலாய்என்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: பிறைமதி போன்ற நெற்றியையுடைய தோழி, பிரமனால் அறியப்படாதவரும், திருவொற்றியூரில் கோயில் கொண்டருள்பவரும், மூன்று கண்களையுடையவரும், கனவிலும் வஞ்சனை நினைவுகள் கொள்ளாதவரும் ஆகிய சிவபெருமான், எனக்கு மணமாலை யணிந்து என்னை மணந்து கொண்ட செயலன்றி படுக்கையில் என்னோடு கலந்து மகிழ்ந்ததில்லை; எனது இக்குறையை வேறே எவரிடம் சொல்லுவேன். எ.று.
இளம்பிறைச் சந்திரனை “கொஞ்சம் மதி” என்று குறிக்கின்றாள். நுதல் - நெற்றி. கஞ்சன் - தாமரைப் பூவில் இருப்பவனாகிய பிரம தேவன்; இடையறாமல் வேதங்களை ஓதுபவனாயினும் சிவனுடைய திருமுடியைக் காண மாட்டாதவ னாயினமையின், “கஞ்சன் அறியார்” என்று கூறுகின்றாள். ஒற்றி - திருவொற்றியூர். சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய மூன்றையும் கண்களாகக் கொண்டவராதலால் சிவனை, “கண் மூன்றுடையார்” என்று உரைக்கின்றாள். தன்னைக் கூடியவரைப் பிரிந்து வருத்தம் விளைவிக்கும் இயல்பில்லாதவர் என்பது தோன்றக் “கனவினிலும் வஞ்சம் அறியார்” என விளம்புகிறாள். திருமணத்துக்குச் சிறப்பு திருமண மலர்மாலை அணிவதாகலின், திருமண நிகழ்ச்சியை “மாலையிட்டதொன்று” எனவும், திருமணத்திற்குப் பின்னர் நுகரப்படும் கலவி இன்பத்தைத் தான் பெறாமைபற்றி வருந்துமாறு புலப்பட, “மஞ்சம் அதனில் என்னோடு மருவியிருக்க நான் அறியேன்” எனவும், இக் குறையைத் தனது உயிர்த்தோழியிடத்தல்லது பிறரிடம் உரைக்கலாகாமை விளங்க “என் குறையை எவர்க்குக் கூறுவனே” எனவும் இயம்புகிறாள். மஞ்சம் - படுக்கை. மருவுதல் - கூடி மகிழ்தல். (14)
|