1527.

     ஆலம் இருந்த களத்தழகர்
          அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
     சால எனக்கு மாலையிட்ட
          தன்மை ஒன்றே அல்லாது
     கால நிரம்ப அவர்புயத்தைக்
          கட்டி அணைந்த தில்லையடி
     கோல மதிவாண் முகத்தாய்என்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      அழகிய வெண்மையான ஒளிமிக்க முகத்தையுடைய தோழி, விடம் பொருந்திய கழுத்தினால் அழகு படைத்தவரும், இயற்கை யழகு சிறந்த திருவொற்றியூரிலுள்ள திருக்கோயிலை யுடையவருமான சிவபெருமான், எனக்கு மணமிகுந்த திருமண மாலையை அணிந்த அருட் தன்மை ஒன்றொழியக் காலம் எல்லாம் அவருடைய தோளைக்கட்டிப் பிடித்து இன்புற்றதில்லை; எனது இக்குறையை உனக்கல்லது யார்க்குக் கூறுவேன். எ.று.

     அழகிய முழுத்திங்களின் வடிவும் கலைஒளியும் உடைமை பற்றித் தோழியைக் “கோல மதிவாண் முகத்தாய்” என்று கூறுகின்றாள். முழுத் திங்கள் என்பதற்குக் “கோல மதி” யென்றும், கலையும் ஒளியும் நிறைந்திருத்தலால் “வாண்மதி” என்றும், கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்தில் இளமகளின் வட்டமான முகத்திற்கு உவமம் செய்வது மரபாதலின் “வாண் முகத்தாய்” என்றும் சிறப்பிக்கின்றாள். மிக்க அன்புடன் தன்னை மணந்து கொண்டமை தோன்ற “சால எனக்கு மாலையிட்ட தன்மை” என்று குறிக்கின்றாள். தன்மை, ஈண்டுச் செயல் மேல் நின்றது. மாலையிட்ட கணவன் தன்னை மருவிக்கூடி மகிழாமை வருத்தம் தருதலால், “காலம் நிரம்ப அவர் புயத்தைக் கட்டி அணைந்த தில்லையடி” என்று இசைக்கின்றாள். காலம் வீணே கழிந்தமை விளங்க “காலம் நிரம்ப” என்கின்றாள். கூடி மகிழ்தற்குரிய பருவம் கனிந்திருக்கவும், அதனைப் பயன் கொள்ளாமை தோன்ற, காலம் நிரம்பவும் என உம்மை விரித்துப் பொருள் செய்தலும் ஒன்று.

     (15)