153.

    வேலன் மாதவன் வேத னேத்திடும்
    மேலன் மாமயில் மேல னன்பருள்
    சால நின்றவன் தணிகை நாயகன்
    வால நற்பத வைப்பென் னெஞ்சமே.

உரை:

     தணிகை மலைத் தலைவனாகிய முருகன் வேற்படையை யுடையவன்; திருமாலும் பிரமனும் வழிபடும் மேன்மையுடையவன்; அழகிய மயில் மேல் ஏறுபவன்; தன்பால் அன்புடைய நன்மக்கள் திருவுள்ளத்தில் நிறைந்து நிற்பவனாதலால் அவனுடைய மெய்ம்மை பொருந்திய திருவடிகட்கு என் நெஞ்சம் வைப்பிடமாகும், எ. று.

     வேல், முருகப் பெருமானுக்குச் சிறந்த படைக்கல மாதலால் “வேலன்” என்று இசைக்கின்றார். மாதவன் - திருமால். வேதன் - பிரமன். காத்தற் றெய்வமாகிய திருமாலும் படைப்புத் தெய்வமாகிய பிரமனும் தங்கள் தொழில் இனிது நடைபெறுதற்கு முருகனது திருவருளை நாடி வணங்குவராதலால், “மாதவன் வேதன் ஏத்திடும் மேலன்” என்றும், மயிலேறும் பெருமானாதலால் “மாமயில் மேலன்” என்றும் புகழ்கின்றார். மேலன் - மேன்மை யுடையவன்; மேலே இருப்பவன். அன்பர் - அன்பாகிய ஞான முடையவர்; “ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானமுண்டார்” என்று சேக்கிழார் உரைப்பது காண்க. அப் பெருமக்கள்பால் உயிர்க்குயிராய்க் கலந்து ஒன்றாயும், அறிவொளியாய் உடனாயும் இருப்பதால் “அன்பருள் சால நின்றவன்” என்றும், அவனது ஞான மயமான திருவடி நெஞ்சின்கண் காணப்படுவது பற்றி, “வால நற்பத வைப்பு என் நெஞ்சமே” என்றும் இயம்புகின்றார். வால்-மெய்ம்மை. “வாலறிவன்” (குறள்) என்றாற் போல, நற்பத வைப்பு, திருவடி வைக்குமிடம். “என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என்னுள்ளமே” (உள்ளக் குறுந்.) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.

     இதனால், முருகன் திருவடி வைக்கும் இடம் நெஞ்சம் என்பது தெரிவித்தவாறு.

     (3)