1531. உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும்
ஊரார் என்னை உடையவனார்
மடுப்பார் இன்ப மாலையிட்டார்
மருவார் எனது பிழைஉரைத்துக்
கெடுப்பார் இல்லை என்சொலினும்
கேளார் உனது கேள்வர்அவர்
கொடுப்பார் என்றோ மாதேஎன்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: வளை யணிந்த கையையுடைய தோழி, எருதின் மேல் ஊர்ந்து வருபவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவரும், எனக்குத் தலைவரும், என் மனத்துக்கு இனிமையானவருமாகிய சிவபெருமான், அருகில் வருக என மொழிந்து எனக்கு மணமாலை யணிந்தார்; அவர் அருகிற் சென்றால் ஒரு சொல்லும் பேசுகின்றாரில்லை; அவரது அருளாணையை எளிதாக மதித்து நான் ஒருகாலும் மீறி நடந்ததில்லை; என்ன செய்வது? எனது குறையை எவர்க்குக் கூறுவேன். எ.று.
குருகு - வளை; மகளிர் கைவளையுமாம். “ஊர்தி வால் வெள்ளேறு” என்பவாகலின், “எருதில் வருவார்” என வுரைக்கின்றாள். நாயகன் - தலைவன். “நினைய இனியான்” எனச் சான்றோர் உரைத்தலின், “எனக் கினியார்” என்கின்றாள். தாமே என்பால் வருக என என்னைத் தம்பால் வருவித்து மாலையிட்டார் என்றற்கு, “வருதி யெனவே மாலையிட்டார்” எனவும் உரைக்கின்றாள். அவர் விரும்பாத தெதனையேனும் மாறாகச் செய்தனையோ எனும் ஐயத்துக் கிடமில்லாமற் கூறுவாளாய், “கருதி யவர்தம் கட்டளையைக் கடந்து நடந்தே னல்லவடி” என்று கூறுகிறாள். கட்டளை - ஆணை. (20)
|