1535.

     வெற்பை வளைத்தார் திருஒற்றி
          மேவி அமர்ந்தார் அவர்எனது
     கற்பை அழித்தார் மாலையிட்டுக்
          கணவர் ஆனார் என்பதல்லால்
     சிற்ப மணிமே டையில்என்னைச்
          சேர்ந்தார் என்ப தில்லையடி
     கொற்பை அரவின் இடையாய்என்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      கொல்லனுலையிற் கூரிதாய் வடிக்கப்பட்ட வேல்போன்ற கண்ணையுடைய தோழி, யாது கொடுப்பினும் பெறுதற்கரிய பரம்பொருளும் அழகுபொருந்திய திருவொற்றியூர்த் தலைவருமான சிவபெருமான், மிக்க இளம் பருவத்தில் எனக்கு மணமாலை சூட்டிச் சென்றார்; சென்றவர் சென்று நீங்கிய திறமல்லது பெதும்பைப் பருவம் எய்திய இப்பொழுதும் கூடி மகிழ வருகின்றாரில்லை. அவரது எண்ணந்தான் இன்னதென அறிகிலேன்; இந்தக் குறையை எவரிடம் கூறுவேன். எ.று.

     கொல் நுண் வடிவேல் - கொல்லனுலையிற் கூரிதாய் வடிக்கப்பட்ட வேல். கொல் - கொல்லனுலை. நுண்மை - கூர்மை மேற்று. மகளிர் கண் கட்குக் கூரிய வேலை யுவமம் செய்தல் மரபு. ஒரு பொருளைப் பெற வேண்டில், அதற்கு ஒத்ததோ உயர்ந்ததோ கொடுத்துப் பெறுதல் உலகியல்; சிவபரம்பொருள் ஒப்பதும் உயர்ந்தது மில்லதாகலின், “என்ன கொடுத்தும் கிடைப்பரியார்” என்று இயம்புகிறாள். சின்ன வயது - பேதைப் பருவம். பேதைப் பருவத்துச் சிறுமிகட்குத் திருமணம் செய்யும் முறை வடலூர் வள்ளல் காலத்தில் நாட்டில் நிலவினமையின், “சின்ன வயதில் மாலையிட்டுச் சென்றார்” என்றும், காதற்காமச் செவ்வியாகிய பெதும்பைப் பருவத்தில் கூடுதல் முறையாகவும், அது நோக்கி வாராமை பற்றி, “சென்ற திறனல்லால் இன்னும் மருவ வந்திலர் காண்” என்றும், மருவ வாராமைக்கு ஏது காண்பவள், ஒன்றும் தெரியாமை புலப்பட, “யாதோ அவர்தம் எண்ணமது” என்றும் இசைக்கின்றாள். அது, பகுதிப் பொருள் விகுதி; சாத்தனவன் வந்தான் என்றாற் போலச் சுட்டுமாம்.

     (24)