1536.

     என்ன கொடுத்தும் கிடைப்பரியார்
          எழிலார் ஒற்றி நாதர்எனைச்
     சின்ன வயதில் மாலையிட்டுச்
          சென்றார் சென்ற திறன்அல்லால்
     இன்னும் மருவ வந்திலர்காண்
          யாதோ அவர்தம் எண்ணமது
     கொன்னுண் வடிவேற் கண்ணாய்என்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      தெங்கின் குரும்பை போன்ற கொங்கைகளையுடைய தோழி, கரும்பினும் இனியவரும், கண் பொருந்திய நெற்றியை யுடையவரும், அரண் சூழ்ந்த திருவொற்றியூர்க்கண் உள்ள அருட்காவலருமாகிய சிவபெருமான், இரும்பு ஒத்த மனத்தையுடைய எனக்கு மணமாலை யணிந்து சென்றாராக, மாலையிட்ட அப்போதன்றி, திரும்பி ஒருநாளும் இவண் போந்து என்னையடைந்து மகிழ்வித்திலர்; இக்குறையை எவர்க்குக் கூறுவேன். எ.று.

     திருவருள் ஞான வின்பத்தின் சிறப்பு விளங்கச் சிவனைத் தேனெனவும் பாலெனவும் தீங்கரும்பெனவும் பரவுவது சான்றோர் இயல்பாதலின், “கரும்பின் இனியார்” எனக் கூறுகிறாள். “தேனினு மினியர் பாலன நீற்றர் தீங்கரும் பனையர்” என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. நெற்றியிற் கண்ணுடையராதல் பற்றிக் “கண்ணுதலார்” எனக் கூறுகிறாள். நுதல் - நெற்றி. கடி - ஈண்டுக் காவலாக அமைந்த அரண் மேற்று. வன்கண்மை புலப்படுத்தற்கு “இரும்பின் மனத்தேன்” என வுரைக்கின்றாள். ஒருகால் என்றவிடத்து, உம்மையை விரித்துக் கொள்க. தென்னை பனை முதலியவற்றின் பிஞ்சு குரும்பை எனப்படுமாயினும், தெங்கின் குரும்பையை மகளிர் கொங்கைக்கு உவமம் கூறுதல் நூலோர் மரபு.

     (25)