154.

    நெஞ்சமே யிஃதென்னை நின்மதி
    வஞ்ச வாழ்வினில் மயங்குகின்றனை
    தஞ்ச மென்றருள் தணிகை சார்தியேல்
    கஞ்ச மாமலர்க் கழல் கிடைக்குமே.

உரை:

     நெஞ்சமே, நினது அறிவு செல்லும் இச்செயலை என்னென்று சொல்வது? வஞ்சம் நிறைந்த இவ்வாழ்வில் மயங்கி ஆழ்கின்றாய்; அடைபவரைத் தஞ்சமென்று அருள் வழங்கும் திருத் தணிகையம் பதியை அடைவாயேல், தாமரை மலர் போன்ற முருகன் திருவடி யின்பத்தைப் பெறலாம் காண், எ. று.

     மதி - இயற்கை யறிவு; ஈண்டு அது போகும் போக்கைக் குறிக்கின்றது. என்னை - என்ன பயனைத் தரும். நெஞ்சின் போக்கு இன்னதென விளக்குதற்காக, “வஞ்ச வாழ்வினில் மயங்குகின்றனை” எனக் கூறுகின்றார். பொய்யும் கள்ளமும் பொருந்தித் துன்பமும் கையறவும் கொண்டு மெய்யாய இன்ப நிறைவு போலத் தோன்றி வாழ்வாரை மயக்குவது பற்றி, “வஞ்ச வாழ்வு” எனவும், “மயங்குகின்றனை” எனவும் எடுத்துரைக்கின்றார். தஞ்சம் - எளிமை. கஞ்சம் - தாமரை. கம், ஜம் என்ற வடசொற் புணர்ப்பு; தண்ணீரில் பிறப்பது என்பது பொருள். கழல், கழலணிந்த திருவடி மேற்று; ஆகு பெயர். மீளவும் மயக்கத்தில் வீழ்ந்தழுந்தாவாறு காக்கும் சிறப்புடைய தென்றற்குக் “கழல் கிடைக்குமே” என்று கட்டுரைக்கின்றார். “குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி” (அதிகை) என்று நாவரசர் நவில்வது காண்க.

     இதனால், தணிகை சார்ந்தார்க்குத் திருவடி அரண் செய்யும் திறம் கூறியவாறு.

     (4)