1541.

     வாடா திருந்தேன் மழைபொழியும்
          மலர்க்கா வனஞ்சூழ் ஒற்றியினார்
     ஏடார் அணிபூ மாலைஎனக்
          கிட்டார் அவர்க்கு மாலையிட்டேன்
     தேடா திருந்தேன் அல்லடியான்
          தேடி அருகிற் சேர்ந்தும்எனைக்
     கூடா திருந்தார் என்னடிஎன்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      வாடுதலின்றி மிக்க தேனை மழைபோல் சொரியும் மலர்ச் சோலைகள் சூழ்ந்துள்ள திருவொற்றியூரையுடைய சிவபெருமான், இதழ்களால் அழகுற்ற பூமாலையை எனக்கு அணிந்தார்; நானும் அவர்க்கு மாலையணிந்து மாற்றினேன்; பின்னர் அவர் வந்திலர்; அதனால் நான் அவரைத் தேடா தொழியவில்லை; தேடிக் கண்டு அவரருகிற் சேர்ந்தேனெனினும், அவர் என்னைக் கூடாமலிருக்கின்றார்; இது என்னையோ, இந்த என் குறையை யார்க்குரைப்பேன். எ.று.

     இருந்தேன் - மிக்க தேன். மழைபோல் பொழியும் என்பது “மழை பொழியும்” என உவமவுருபு தொக்க நின்றது. காவனம் - சோலையாகிய பூஞ்செடிகள் காடுபோல் நிறைந்த சோலை. ஏடாரணிபூ - அழகி்ய இதழ்களால் வனப்புடைய பூ. திருமணத்தால் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு கணவனும் மனைவியுமான தொடர்புற்றமை விளக்குதற்கு “மாலை எனக்கிட்டார் அவர்க்கு மாலையிட்டேன்” என்று கூறுகிறாள். வாராதிருந்தமையால் சிவனைத் தேடியலைந்தமை தோன்ற “தேடாதிருந்தேன் அல்லடி” எனவும், தேடிக் கண்டணைந்த திறத்தை “தேடியருகிற் சேர்ந்தும்” எனவும், அடைந்தவிடத்தும் கூட்டம் பெறாமையின் அவலிக்கின்றாளாதலால், “சேர்ந்து மெனைக் கூடாதிருந்தார் என்னடி” எனவும் சொல்லி வருந்துகிறாள்.

     (29)