1542. நலத்திற் சிறந்த ஒற்றிநகர்
நண்ணும் எனது நாயகனார்
வலத்திற் சிறந்தார் மாலையிட்டு
மறித்தும் மருவார் வாராரேல்
நிலத்திற் சிறந்த உறவினர்கள்
நிந்தித் தையோ எனைத்தமது
குலத்திற் சேரார் என்னடிஎன்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: இயற்கை நலங்களால் மேன்மையுற்ற திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் எனது தலைவராகிய சிவபெருமான் வன்மை மிக்கவராய் எனக்கு மாலையிட்டு மணந்து கொண்டு மீள என்பால் வருகின்றாரில்லை; அவர் வாராராயின் இவ்வுலகில் எனக்கு நெருங்கிய உறவினர்கள் குறைகூறி என்னைத் தங்கள் குலத்தில் சேர்க்காமல் விலக்கி விடுவராதலால், நான் என்ன செய்வேன்; என்னுடைய இக் குறையை எவரிடம் உரைத்து நீக்கிக் கொள்வேன்? எ.று.
நலம் - நிலநீர் வளமாகிய இயற்கை நலம். நாயகன் - தலைவன். வலம் - வன்மை; நெற்றியுமாம், மாலையிட்டு மணந்து கொண்ட கணவன் மனைக்குப் போந்து மனைவியைக் கூடாது ஒழிப்பானாயின் அவள்பால் குறை உண்டென்று உலகம் பழிக்கும் இயல்பு பற்றி “வாராரேல் நிலத்திற் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனைத் தமது குலத்திற் சேரார்” என்று சொல்லி வருந்துகிறாள். நிந்தித்தல் - குற்றம் கூறல். கணவனால் விலக்கப்பட்ட பெண்ணை உலகம் பழித்து இகழுமாதலின் “ஐயோ” என அலறுகின்றாள். சேரார், பிறவினைப் பொருட்டு. (30)
|