1543.

     ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார்
          என்கண் மணியார் என்கணவர்
     வார்ந்தேன் சடையார் மாலையிட்டும்
          வாழா தலைந்து மனமெலிந்து
     சோர்ந்தேன் பதைத்துத் துயர்கடலைச்
          சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன்
     கூர்ந்தேன் குழலாய் என்னடிஎன்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      தேன் மிக்க கூந்தலையுடைய தோழி, குளிர்ந்த தேன் வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கும் சோலைகளையுடைய திருவொற்றியூரில் உள்ளவரும், என் கண்ணின் மணி போன்றவரும், எனக்குக் கணவனும், நீண்ட சடையையுடையவருமாகிய சிவபெருமான், என்னைத் தமக்கு மனைவியாக மாலை யணித்தாராயினும், யான் வாழ்வின்றி அலைந்து மனம் மெலிந்து உள்ளம் பதைக்கச் சோர்வுற்றுத் துன்பக் கடலில் வீழ்ந்து இப்பொழுதும் துடிதுடிக்கின்றேன்; என்ன செய்வேன்; என்னுடைய குறையை யார்க்கு எடுத்துரைப்பேன்; கூறுக. எ.று.

     ஈர்ந்தேன் - குளிர்ந்த தேன். தண்ணிய சோலையில் மலரிடத்துத் தேனாதலின், “ஈர்ந்தேன்” எனப்பட்டது. தேனளி - தேன் ஈட்டும் வண்டு. கொன்றை மலரின் தேன் படர்ந்து துளிக்கும் சடையாதலின் சிவன் திருமுடிச்சடையை “வார்ந்தேன் சடை” எனச் சிறப்பிக்கின்றாள். கூட்டவின்பம் பெறாமையால் வேட்கை மீதூர்ந்து வருந்துதலை “வாழாமை” என வழங்குகிறாள். வெம்மை மிகுதியும் இளமைத் துடிப்பும் நின்று வருத்துதலின், “அலைந்து மனம் மெலிந்து சோர்ந்தேன் பதைத்துத் துயர்க்கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிகின்றேன்” என்று சொல்லுகிறாள். கூர் - மிகுதிப் பொருட்டாய உரிச் சொல். கூர் தேன்; கூர்ந்தேன் என வந்தது. வார், கூர் என்ற விடத்தும் இதுவே கூறிக் கொள்க - (தொல். புள்ளி. 66).

     (31)