80. திருவுலா வியப்பு

திருவொற்றியூர்

    அஃதாவது வீதி உலாப் போன்ற திருவெற்றியூர்த் தியாகப் பெருமானைக் கண்ணாற் கண்டு காதல் மிக்கூர்ந்த நங்கை தன் மனம் அவ்விறைவன்பால் படர்ந்து ஒன்றியதை வியந்து தோழிக்கு உரைப்பதாய், உலகியலில் பொறிவாயிலாக எங்கும் எப்பொருளின் கண்ணும் சென்று படிந்து அலமருந்துழலும் தன் மனம் ஒருமுகப்பட்டுத் தியாகப் பெருமான்பால் படிந்து ஒன்றியது நங்கைக்கு வியப்பை விளைவித்தலால், இப் பத்து, திருவுலா வியப்பு எனப்படுகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1544.

     வெள்ளச் சடையார் விடையார்செவ்
          வேலார் நூலார் மேலார்தம்
     உள்ளத் துறைவார் நிறைவார்நல்
          ஒற்றித் தியாகப் பெருமானார்
     வள்ளற் குணத்தார் திருப்பவனி
          வந்தார் என்றார் அம்மொழியை
     விள்ளற் குள்ளே மனம்என்னை
          விட்டங் கவர்முன் சென்றதுவே.

உரை:

      கங்கை தங்கிய சடையையுடையவரும், எருதை ஊர்தியாக வுடையவரும், சிவந்த வேற்படையை யுடையவரும், மார்பில் பூண்நூல் அணிபவரும், மேன்மைப் பண்பு உடையவர்களின் மனத்தின்கண் எழுந்தருள்பவரும், எங்கும் நிறைபவரும், வளமையால் நன்மை மிக்க திருவொற்றியூர்த் தியாகப் பெருமானாகியவரும், வள்ளன்மை பொருந்திய குணம் உடையவருமாகிய சிவபெருமான் வீதி வுலா வருகின்றார் என்று அயல் மகளிர் சொன்னாராக, அதனைக் கேட்டு நான் மகிழ்ச்சியால் ஒரு சொல் சொல்லுதற்கு முன்பே, என் மனம் துள்ளி விரைந்து சென்று அவருடைய திருமுன்பு அடைந்தொழிந்தது காண். எ.று.

     வெள்ளம் - கங்கையாறு. விடை - எருது. அறிவு, அன்பு, ஒழுக்கங்களால் உயர்ந்த சான்றோர்களின் உள்ளத்தைத் தனக்கு இனிய இடமாகக் கொள்வதனால், சிவனை “மேலார்தம் உள்ளத் துறைவார்” என உரைக்கின்றாள். எங்கும் எப்பொருளிலும் ஒழிவற நிறைந்திருப்பது பற்றி “நிறைவார்” எனச் சிறப்பிக்கின்றாள். தியாகப் பெருமான் - திருவொற்றியூர்ச் சிவனுக்குப் பெயர். வரையறையின்றித் தனது திருவருளை வேண்டுவார்க்கு வேண்டியாங்கு வழங்குவது பற்றித் தியாகப் பெருமானை “வள்ளற் குணத்தார்” என்று புகழ்கின்றாள். உலாக் காட்சியில் உள்ளம் உற்ற உவகை மிகுதி புலப்பட “திருப்பவனி” என்கின்றாள். தியாகப் பெருமான் திருவுலா வருகின்றாரென்று அயல் மகளிர் ஆர்வமுடன் சொன்னமையால், நங்கையும் ஆதர மிகுந்து நானும் வருகின்றேன் என்று நாவால் உரைப்பதற்குள், மனத்தின்கண் திருவுலாக் காட்சி மனக் கண்ணில் புலனாயினமை விளங்க, “அம்மொழியை விள்ளற் குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றது” என அறிவிக்கின்றாள். திருப்பவனி வருகின்றார் என்று அயல் மகளிர் சொல்லி முடிப்பதற்கு முன்பே, என் மனம் அவர்பால் சென்று சேர்ந்தது என்பாளாய் “அம்மொழியை விள்ளற் குள்ளே” என்கின்றாள் எனினும் பொருந்தும்.

     இதனால், திருவுலாக் காட்சியில் தன் மனம் நயந்து ஈடுபட்டு மனம் ஒன்றிய திறத்தை நங்கை எடுத்து மொழிந்தவாறாம். இதனை இனி வரும் பாட்டுக்களிலும் கருத்தாகக் கூறிக் கொள்க.

     (1)