1547.

     காண இனியார் என்இரண்டு
          கண்கள் அனையார் கடல்விடத்தை
     ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல்
          ஒற்றித் தியாகப் பெருமானார்
     மாண வீதி வருகின்றார்
          என்றார் காண வருமுன்நான்
     நாண எனைவிட் டென்மனந்தான்
          நயந்தங் கவர்முன் சென்றதுவே.

உரை:

      காண்பதற்கினியவரும், என்னுடைய இரண்டு கண்களைப் போன்றவரும், கடலில் தோன்றிய விடத்தை ஊணாக வுண்டருளியவரும், எல்லாரினும் உயர்ந்தவரும், வளமையால் நலமிக்க திருவொற்றியூர்த் தியாகப் பெருமானுமாகிய சிவபெருமான், காண்பார் மாண்புறத் திருவீதி வுலா வருகின்றார் என்று அயல் மகளிர் சொன்னாராக, என் புறக் கண்களால் நான் கண்டு மகிழ்தற்கு மனையின் உள்ளிருந்து வெளி வருவதற்கு முன்னே நாணிழந்து வருந்த, என் மனம் காதல் மிகுந்து அங்கு அவர் முன் சென்று சேர்ந்தது காண். எ.று.

     அகம், புறம் என்ற இருவகைக் கண்களாலும் காண்பார் காணுந்தோறும் இன்பம் மிகுகின்ற திருமேனியை யுடையவராதலின், சிவனைக் “காண இனியார்” என்கின்றாள். கடலில் எழுந்த விடம் மிகக் கொடியதாயினும், அதனைத் தீங்கு செய்யாத அமுதுபோல உண்டு அதற்கஞ்சிய தேவர்களை உய்வித்தாராதலின், கடல் விடத்தை “ஊணின் நுகர்ந்தார்” என உரைக்கின்றாள். “நஞ்சமுது செய்வித்தார் நனிபள்ளி அடிகளாரே” - (நனிபள்ளி) என்பது திருமுறை. தேவர்கட்கும் முனிவர்கட்கும் ஏனை மக்கட்கும் எல்லார்க்கும் உயர்ந்தவராதலின், “உயர்ந்தார்” எனச் சிறப்பித்து ஓதுகின்றாள். பல்வகை வளங்களால் தன்கண் உறைவார்க்கு எல்லா நலங்களையும் தருதலின் “நல்லொற்றித் தியாகப் பெருமானார்” எனக் கூறுகின்றாள். 'வீதி மாண வருகின்றார்' என இயைக்க. திருவுலா வரவு வீதிக்குப் பெருமையும், அங்கு நின்று காண்பார்க்குத் திருவருளின்பமும் உண்டாதல் பற்றி “வீதி மாண வருகின்றா ரென்றார்” என விளம்புகிறாள். மனம் முன்னே சென்றொழியத் தான் அதனை யிழந்து சென்றது மனமின்றிச் செல்வது போன்றதோர் இழி வரவு பிறப்பித்தமையின் “நாண எனைவிட்டு மனம் சென்றது” என்கிறாள். தனக்கு முன் மனம் விரைந்து சென்றதற்கு அதன் கண்ணெழுந்த காதல் மிகுதி எனக் காரணங் கூறுவாள், “நயந்து” என வுரைக்கின்றாள்.

     (4)