1548. செழுந்தெண் கடற்றெள் அமுதனையார்
தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார்
கோலப் பவனி என்றார்நான்
எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங்
கேகு முன்னர் எனைவிடுத்தே
அழுந்து நெஞ்சம் விழுந்துகூத்
தாடி அவர்முன் சென்றதுவே.
உரை: செழுமையான தெளிந்த கடலிடத்துப் பிறந்த அமுது போன்றவரும், தியாகர் என்ற திருப்பெயரை யுடையவரும், கொழுவிய தண்ணிய சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரை யுடையவருமான சிவபெருமான் அழகிய பவனி வருகின்றார். என்று அயல் மகளிர் சென்று மொழிந்தாராக, நான் இருக்கைவிட்டு எழுந்து, நெகிழ்ந்த சீலையை ஒழுங்குற அணிந்துகொண்டு அவ்விடம் நோக்கிச் செல்லுதற்கு முன்பே, அவர்பாலுளதாகிய அன்பிலழுந்தும் எனது மனம் என்னைக் கைவிட்டு நீங்கி விழுந்தெழுந்து கூத்தாடிக்கொண்டு, அவர் திருமுன்பு சென்று சேர்ந்தது காண். எ.று.
செழுமையை அமுதுக்கும் ஏற்றுக. தெளிவுடைமை கடலுக்கு இயல்பாதலின், “தெண் கடல்” எனச் சிறப்பிக்கப்படுகிறது. தெண் கடலில் பிறந்த அமுதாதலின், “தெள்ளமுது” எனப்பட்டது. தான் நஞ்சுண்டு, பிறர் வுய்ய நஞ்சுண்ட நலம் தோன்றச் சிவனுக்குத் தியாகர் என்று பெயர் தந்தமையின், “தியாகரெனும் ஓர் திருப்பெயரார்” என்று போற்றுகிறாள். கொழுமை - ஈண்டு வளமிகுதி குறித்தது. திருவுலாவின் அழகு விளங்க “கோலப் பவனி“ என்று கூறுகிறாள். பவனி வரவு கேட்டதும் விரைந்தெழுந்தமையால், உடுத்த உடை நெகிழ்ந்தமை புலப்பட “எழுந்திங் கவிழ்ந்த கலை” என்றும், அதனை மீள நன்குடுத்து வீதிக்குச் செல்ல வேண்டுதலின் “புனைந்தங் கேகு முன்னர்” என்றும் குறிக்கின்றாள். நெஞ்சம் சிவன்பால் கொண்ட அன்பு நிறைந்து விரைந்து சென்றமை தோன்ற “அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர் முன் சென்றதுவே” என்று விதந்துரைக்கின்றாள். (5)
|