155.

    கிடைக்குள் மாழ்கியே கிலம்செய் யந்தகன்
    படைக்குள் பட்டிடும் பான்மை யெய்திடேன்
    தடைக்குள் பட்டிடாத் தணிகை யான்பதத்
    தடைக்கலம் புகுந் தருள் செழிப்பனே.

உரை:

     மண்ணக வாழ்விற் கிடந்து மயக்குற்றுச் சாக்காட்டை எய்துவிக்கும் இயமனுடைய தூதர் கைப்பட்டு வருந்தும் முறைமை யான் அடைய மாட்டேனாய் எத்தகைய தடைகளாலும் விலக்கப்படாத தணிகை முருகன் திருவடியில் அடைக்கலம் பெற்று அருள் நலம் மிகவுற்று மகிழ்ந்திருப்பேன், எ. று.

     கிடப்பது கிடையாதலால் மண்ணியல் வாழ்வில் மடங்கிக் கிடக்கும் செயலைக் “கிடை” எனக் குறிக்கின்றார். கிலம்- அழிவு; ஈண்டு இறப்பின் மேற்று. அந்தகன் படை- இயமன் தூதுவர். பான்மை- முறைமை. பிறப்பும் இறப்பும் பாலது ஆணையாதலால், அந்தகன் படைக்குட்பட்டு இறப்பதைப் “பான்மை” என்று கூறுகிறார். பிறப்பெய்தி வாழ்வது பிறவாப் பெருவாழ்வு எய்துதற்கேயாக, நமன் கைப்பட்டு வருந்தி வீணே இறத்தற்கன்று என்ற கருத்துப் புலப்பட, “அந்தகன் படைக்குட் பட்டிடும் பான்மை எய்திடேன்” என்று பேசுகின்றார். தேவராலும் தடுத்தற்கரிய ஆற்றலும் வலியுமுடையனாதலின் முருகப் பெருமானைத் “தடைக்குட் பட்டிடாத் தணிகை யான்” என்றும், அவன் திருவடி நீழல் அடைந்தார் பேரின்பத் தினிதிருப்ப ரென்பது பற்றித் “தணிகையான் பதத்து அடைக்கலம் புகுந்து அருள் செழிப்பன்” என்று உரைக்கின்றார்.

     இதனால் தணிகை முருகனை அடைக்கலம் புகுந்தார் அருள் வாழ்வில் இனிதிருப்பர் என்பது கூறியவாறாம்.

     (5)