1550. பின்தாழ் சடையார் தியாகர்எனப்
பேசும் அருமைப் பெருமானார்
மன்றார் நடந்தார் ஒற்றிதனில்
வந்தார் பவனி என்றார்நான்
நன்றாத் துகிலைத் திருத்துமுனம்
நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின்
மென்தார் வாங்க மனம்என்னை
விட்டங் கவர்முன் சென்றதுவே.
உரை: பின்பக்கம் தாழ்ந்த சடையையுடையவரும், தியாகப் பெருமானெனச் சான்றோர் பரவும் அருமை வாய்ந்த பெருமானும், தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத் தியற்றுபவருமாகிய சிவபெருமான் திருவொற்றியூரின்கண் மாட வீதியில் திருவுலா வருகின்றார் என்று மகளிர் சொன்னார்களாக, நான் உடுத்திருந்த உடையைத் திருத்திக் கொண்டு புறப்படுதற்கு முன், அவருடைய அழகிய கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட குளிர்ச்சி பொருந்திய பூமாலையாகிய மென்மை சான்ற அடையாள மாலையை வாங்கிக் கொள்ளும் ஆர்வத்தால் என் மனம் என்னின் நீங்கி அவர் திருமுன் சென்று சேர்ந்தது, காண். எ.று.
முடியின் சடை நெடிது நீண்டு பரந்து முதுகின் பக்கம் விரிந்து தாழ்ந்து கிடத்தலின், சடையைப் “பின்தாழ் சடை” என்று புகல்கின்றாள். திருவொற்றியூர் இறைவனுக்குத் தியாகர் எனப் பெயர் சூட்டி அறவோர் பலரும் போற்றுவது பற்றித் “தியாகர் எனப் பேசும் அருமைப் பெருமானார்” என்கின்றாள். அம்பலத்தில் ஞானநடம் புரியும் ஞான வள்ளலாதலால் “மன்றார் நடத்தார்” எனப் போற்றி மகிழ்கின்றாள். திருவொற்றியூர் மாட வீதியின்கண் திருவுலா வருவது விளங்கக் கண்ட மகளிர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கூறுகின்றார். என்றற்கு, “ஒற்றிதனில் வந்தார் பவனி என்றார்” என வுரைக்கின்றாள். அது கேட்டதும், காட்சி யாசை கை கடந்து விரைந்தெழுந்த நங்கைக்கு உடுத்திருந்த ஆடை நிலைகுலைந்தமையின், அதனைச் செம்மையுற உடுத்துச் செல்லுதல் முறையாதல் பற்றி “நான் நன்றாத் துகிலைத் திருத்து முனம்” என்றும், அதற்குள் மனம் விரைந்து அவர் திருமுன் சென்று சேர்ந்தது என்பாளாய், “மனம் என்னை விட்டு அவர் முன் சென்றது” என்றும், அங்ஙனம் அது விரைந்து சென்றது அவரது மார்பில் அணியும் அடையாள மாலையாகிய கொன்றை மலர் மாலையைப் பெறுதற்கு என்பாளாய், “நலஞ்சேர் கொன்றை நளிர்ப் பூவின் மென்தார் வாங்க” என்றும் சொல்கின்றாள். நலம் - அழகு. நளிர் - குளிர்ச்சி. மலர் மாலை யாதலின் மென்மை இயல்பாதல் பற்றி “மென் தார்” என விளம்புகிறாள். (7)
|