1551.

     கண்ணார் நுதலார் மணிகண்டர்
          கனக வரையாங் கனசிலையார்
     பெண்ணார் பாகர் தியாகர்எனப்
          பேசும் அருமைப் பெருமானார்
     தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில்
          சார்ந்தார் பவனி என்றனர்நான்
     நண்ணா முன்னம் என்மனந்தான்
          நாடி அவர்முன் சென்றதுவே.

உரை:

      கண் பொருந்திய நெற்றியை யுடையவரும், நீலமணியின் நிறத்தையுடைய கழுத்தையுடையவரும், பொன் மலையாகிய பெரிய வில்லை ஏந்துபவரும், உமையம்மையாகிய பெண்ணை ஒருபாகத்தே உடையவருமாகிய தியாகப் பெருமான் என்று புகழப்படும் அருமை வாய்ந்த சிவபெருமான், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூர் மாட வீதியில் திருவுலா வருகின்றார் என்று மகளிர் சொன்னார்களாக, நான் அவ்வீதியை அடைவதற்கு முன்பே என் மனம் ஆர்வம் நிறைந்து அவர் திருமுன் சென்று சேர்ந்தது, காண். எ.று.

     நெற்றியில் கண்ணுடைமை சிவமூர்த்தத்திற்குச் சிறப்பாதல் பற்றி “கண்ணார் நுதலார்” என்றும், அருள் வன்மையைப் புலப்படுத்தும் இயல்பு பற்றி “மணிகண்டர்” என்றும், அவரது பேராற்றலைப் புலப்படுத்தற்கு “கனக வரையாம் கனசிலையார்” என்று புகழ்கின்றாள். ஓருருவில் பெண், ஆண் என ஈருருப் பெற்று விளங்கும் நலம் புலப்பட “பெண்ணார் பாகர்” என எடுத்தோதுகிறாள். திருவொற்றியூரில் எழுந்தருளும் சிவபெருமானுக்குத் தியாகர் என்பது சிறப்புப் பெயராதலின் “தியாகரெனப் பேசும் அருமைப் பெருமானார்” என உரைக்கின்றாள். மனையகத்தேயிருந்து பணி புரிந்துறையும் இளமகளிர்க்குத் திருவுலா முதலிய புறக்காட்சிகள் கருத்தைக் கவரும் இயல்பினவாதல் ஒருபாலாக, அத் தியாகப் பெருமான்பால் சிறப்புறக் காதல் கூர்ந்தவளாதலால் நங்கை, “ஒற்றிதனில் சார்ந்தார் பவனி” எனவும், அவர் கூற்று தன்னை அழைக்கும் குறிப்புற்றிருந்தமையின் “என்றனர்” எனவும் எடுத்து மொழிகின்றாள். ஆர்வத்தால் உந்தப் பெற்று விரைந்து சென்றமை விளங்க “நான் நண்ணா முன்னம் மனம் அவர்முன் சென்றது” என்கின்றாள்.

     (8)