1552.

     ஈமப் புறங்காட் டெரியாடும்
          எழிலார் தில்லை இனிதமர்வார்
     சேமப் புலவர் தொழும்ஒற்றித்
          திகழுந் தியாகப் பெருமானார்
     வாமப் பாவை யொடும்பவனி
          வந்தார் என்றார் அதுகாண்பான்
     காமப் பறவை போல்என்மனம்
          கடுகி அவர்முன் சென்றதுவே.

உரை:

      சுடுகாட்டிற் கையில் எரியை யேந்திச் சிவபெருமான் திருக் கூத்தாடும் அழகை யுடைய தில்லை நகரின்கண் இனிது எழுந்தருள்பவரும், நலம் நிறைந்து வாழும் தேவர்கள் போற்றிப் பரவுகின்ற திருவொற்றியூரிற் சிறந்து விளங்குபவருமாகிய சிவபிரான், இடப்பாகத்து உமைநங்கையுடன் திருவுலா வருகின்றாரென அயல் மங்கையர் உரைத்தாராக, அதனைக் காண்பதற்குக் காதலுருக் கொண்டதொரு பறவை போல என்னுடைய மனம் அவர் திருமுன்பு விரைந்து சென்று சேர்ந்தது காண். எ.று.

     ஈமம் - பிணங்களைச் சுட்டெரிக்கும் காடு. ஊர்க்குப் புறத்தே இஃது ஒதுக்கப்பட்டிருப்பது பற்றிப் “புறங்காடு” எனப்படுகிறது. ஆதலால், “ஈமப் புறங்காடு” என்று குறிக்கின்றாள். சுடுகாட்டில் நள்ளிரவில் பேய்க் கணம் உடனாடச் சிவபிரான் கையில் எரியேந்தி ஆடுகிறான் எனப் பெரியோர் கூறுபவாதலால், “ஈமப் புறங்காட் டெரியாடும் ஈசர்” என்று உரைக்கின்றாள். தில்லைப் பதியில் சுடுகாட்டில் சிவன் எரியேந்தி யாடுகின்றான் என்பது பண்டையோர் கொள்கை. சுடுகாட்டில் அருவருப்பின்றி இனிதிருந்து ஆடுவது தோன்ற, “இனிதமர்வார்” எனக் கூறுகின்றாள். புலவர் - தேவர்கள்; இந்திரன் காவலுறும் கற்பகச் சோலையிற் போக வாழ்வு முடையராதலால், அவர்களைச் “சேமப் புலவர்” எனச் சிறப்பிக்கின்றாள். சேமம் - நலமார்ந்த காவல். வாமப் பாவை - இடப்பாகத் துறையும் உமையம்மை. உமையம்மை பிரிவின்றி உடனிருக்கத் திருவுலா வருதலால் “வாமப் பாவை யொடும் பவனி வந்தார்” என மகளிர் உரைக்கின்றார்கள். தேவியொடு தோன்றும் சிவக்காட்சி மங்கல மாண்பும் அருள்விளக்கமு முடையதாதலால் காண்பதினிது என்ற கருத்தாற் சென்றமை யுணர்த்தற்கு, “அது காண்பான் சென்றது” எனத் தெரிவிக்கின்றாள். காமப் பறவை - காதலாகிய பறவை.

     (9)