1556. கருதற் கரியார் கரியார்முன்
காணக் கிடையாக் கழலடியார்
மருதத் துறைவார் திருவொற்றி
வாண ரின்றென் மனைக்குற்றார்
தருதற் கென்பா லின்றுவந்தீ
ரென்றே னதுநீ தானென்றார்
வருதற் குரியீர் வாருமென்றேன்
வந்தே னென்று மறைந்தாரே.
உரை: நினைத்தற் கரியவரும், கரிய நிறமுடைய திருமால் முன்பு காண்பதற் கரியவாகிய கழலணிந்த திருவடியை யுடையவரும், மருதவளம் மிக்க வூர்களில் எழுந்தருள்பவரும், திருவொற்றியூரில் வாழ்பவருமாகிய சிவபெருமான் என் வீட்டுக்கு வந்தாராக, இன்ப அன்பு தருதற் பொருட்டு என்னிடம் இன்று வந்தருளினீர் என்று சொன்னேனாக, தருமது நீதான் என்று விடை யிறுக்கின்றார்; அது கேட்டு, என்பால் வருதற்குரியவர் நீவிராதலால் வாரும் என மொழிந்தேன்; இதோ வந்தேன் என்று வாயாற் சொல்லி மறைந்து விட்டார். எ.று.
“இன்னவுரு இன்ன நிறம் என்றறிவதே அரி” தாகலின், சிவனைக் “கருதற்கரியார்” என்று கூறுகிறாள். கரிய நிறமுடைமை பற்றித் திருமாலைக் “கரியார்” எனவும், திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய காலத்தில், திருமாலால் திருவடி காண்டற் கரிதாயினமையின், “கரியார் காணக் கிடையாக் கழலடியார்” எனவும் இயம்புகிறாள். மருதம் என்று பொதுப்பட வுரைக்கின்றாராயினும், பாண்டி நாட்டு மருதத்துறையும், சோழநாட்டுத் திருவிடை மருதும், நடுநாட்டு இடை மருதும் கொள்ளப்படும். வாழ்நர், வாணரென வந்தது. தருதற்கென்பால் இன்று வந்தீர் என்பது என்பால் இன்பம் தருதற்கு இன்று வந்தீர் எனவும், உவந்தீர் எனவும் இயையும், உவத்தல் - மகிழ்தல். இன்பம் தருவது நீயன்றி வேறில்லை என்றற்கு “அது நீதான்” என்று சொல்லுகிறாள். அன்புள்ள உள்ளத்தில் எழுந்தருள்பவராதலின், சிவனை “வருதற்குரியீர்” என வுரைக்கின்றாள். வாரும்: உம்மீற்று ஏவல் வினை. (3)
|