1557. கல்லை வளைக்கும் பெருமானார்
கழிசூ ழொற்றிக் கடிநகரார்
எல்லை வளைக்குந் தில்லையுள்ளா
ரென்றன் மனைக்குப் பலிக்குற்றார்
அல்லை வளைக்குங் குழலன்ன
மன்பி னுதவா விடிலோபம்
இல்லை வளைக்கு மென்றார்நா
னில்லை வளைக்கு மென்றேனே.
உரை: மேருமலையை வில்லாக வளைக்கும் பெரியவனும், உப்பங்கழி பொருந்திய திருவொற்றியூரென்னும் காவலையுடைய நகரின்கண் எழுந்தருள்பவரும், பரந்த எல்லையையுடைய தில்லைப் பதியில் உள்ளவருமான சிவபெருமான், பலி வேண்டி என் மனையின்கண் வந்தடைந்து, என்னை நோக்கி இருள் போன்ற கூந்தலையுடையவளே, நீ எனக்கு அன்புடன் அன்னம் நல்காயாயின் உலோபம் என்னும் குற்றம் உன் செல்வமனையைச் சூழ்ந்து கொள்ளும் என்று சொன்னார்; அவற்கு நான் என் மனமாகிய இல்லத்துக்குத் தலைவராகிய உமது திருவருள் உம்மை நீங்காவாறு பிணிக்கும் என்று இயம்பினேன். எ.று.
கல் - மலை; ஈண்டு மேருமலை மேற்று. திரிபுர மெரித்த காலையிற் சிவன் மேருமலையை வில்லாக வளைத்தது ஈண்டுக் குறிக்கப்படுகிறது. கடி - காவல். பிடி யானையைச் செலுத்தி ஊர்கட்கு எல்லை வகுக்கும் மரபு பற்றி, “எல்லை வளைக்கும் தில்லை” என்கின்றாள். பிடியானை செலுத்தி எல்லை வளைக்கும் திறம் திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டால் அறியலாம். அல் - இருள். குழலாய் எனற்பாலது அண்மை விளியேற்றுக் 'குழல்' என்று நின்றது. அன்னம் - சோறு; உண்பலியுமாம். உலோபம் - கடும் பற்றுள்ளம். உலோபத் தன்மை பாவமாதலின், “உலோபம் இல்லை வளைக்கும்” என வுரைக்கின்றார். என் மனக்கோயிலில் இருந்தொளிரும் தலைவராகிய உமது திருவருள் ஒளி, பாவமாகிய இருள் படராதபடி என்னைச் சூழ்ந்து நின்று தடுக்கும் என்றற்கு, “இல்லை வளைக்கும் என்றேன்” எனக் கூறுகிறாள். இல், ஐ - இல்லத்துத் தலைவன். விடில் லோபம் என்பது, விடிலோபம் என வந்தது. (4)
|