1558. வெற்றி யிருந்த மழுப்படையார்
விடையார் மேரு வில்லுடையார்
பெற்றி யிருந்த மனத்தர்தமுட்
பிறங்குந் தியாகப் பெருமானார்
சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ்
சொல்லி நகைக்க வருகணைந்தார்
ஒற்றி யிருமென் றுரைத்தேனா
னொற்றி யிருந்தே னென்றாரே.
உரை: வெற்றித் திருவீற்றிருக்கின்ற மழுப்படையை ஏந்துபவரும், எருதாகிய ஊர்தியுடையவரும், மேருமலையை வில்லாக வுடையவரும், திருவருட் பேற்றுக்குரிய தன்மை பொருந்திய மனமுடைய மெய்யன்பர் உள்ளத்தில் இருந்து ஓங்கும் தியாக மூர்த்தியுமாகிய சிவபெருமான், என்னைச் சூழவிருந்த மகளிர் எல்லாரும் கண்டு பல பேசி நகைக்குமாறு எனக்கு அருகில் வந்தாராக, நான் விலகியிரும் என்ற கருத்தினால் “ஒற்றியிரும்” என வுரைத்தேன்; நான் ஒற்றி யிருக்கின்றேன் என மொழிகின்றார். எ.று.
தோல்வியே காணாததாகலின், மழுவை, “வெற்றி யிருந்த மழுப்படை” எனப் புகழ்கின்றாள். வெற்றி - வெற்றித் திரு. மேரு - மேருமலை. பெற்றி - திருவருட் பேற்றுக்குரிய தன்மை. “பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்” (திருவாச) என்று சான்றோர் வழங்குவதறிக. பெற்றியிருந்த மனத்தர், திருவருள் நிறைந்திருக்கும் தூய மனமுடைய சிவ ஞானிகள். மெய்ஞ்ஞானிகளின் திருவுள்ளமே சிவனுக்குத் திருக்கோயிலாதலின், “உட்பிறங்கும் தியாகப் பெருமானார்” எனவும், பலி வேண்டித் திரிவார் உருவில் வந்தாராயினும், அவர் சிவமே எனத் தெளிந்தமை புலப்படுத்தற்குத் “தியாகப் பெருமானார் அருகணைந்தார்” எனவும் இசைக்கின்றாள். பலி வேண்டி வருபவர், சிறிது சேய்மையிலிருந்து அதனைக் கேட்பது முறையாக, அருகணைவது நகைத்தற்குரிய செயலாதலின், “பெண்களெல்லாம் சொல்லி நகைக்க” எனக் கூறுகிறாள். தான் தன்னொத்த மகளிரிடையே இருந்தமையின், “சுற்றியிருந்த பெண்கள்” என்றும், அவர் அனைவரும் காண அருகணைந்தமையின், “பெண்களெலாம்” என்றும், தத்தம்முள்ளும் பிறரிடத்தும் இதனைச் சொல்லி இகழ்வரென்றற்குச் “சொல்லி நகைக்க” என்றும் உரைக்கின்றாள். ஒற்றி யிருத்தல் - விலகிச் சிறிது தூரத்தே யிருத்தல். ஒற்றி யிருந்தேன் என்புழி, ஒற்றி - திருவொற்றியூர். (5)
|