1559.

     விண்டங் கமரர் துயர்தவிர்க்கும்
          வேற்கை மகனை விரும்பிநின்றோர்
     வண்டங் கிசைக்கும் பொழிலொற்றி
          வதிவா ரென்றன் மனையடைந்தார்
     தண்டங் கழற்கு நிகரானீர்
          தண்டங் கழற்கென் றேன்மொழியாற்
     கண்டங் கறுத்தா யென்றார்நீர்
          கண்டங் கறுத்தீ ரென்றேனே.

உரை:

      விண்ணுலகத்தில் வாழும் அமரர்களின் துன்பத்தைப் போக்குகின்ற வேலேந்திய மகனாகிய முருகனை விரும்பியிருப்பவரும், வண்டுகள் தங்கி ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமாகிய தியாகப் பெருமான், பலி வேண்டி என் மனைக்கு வந்தாராக, நெருப்புத் தூண்போல நீவிர் ஒளிகொண்டு திகழ்கின்றீர், உமது திருவடிக்கு வணக்கம் என்று சொன்னேன்; எனக்கு மறு மாற்றம் தருவாராய்ச் 'சொல்லால் நீ கரும்பின் இனிமைச் சுவையை வீழ்த்தினாய்' என்று உரைத்தார்; நீர் கழுத்துக் கறுத்தீர் என்று நான் சொன்னேன். எ.று.

      விண் - விண்ணுலகம்; முருகனை என்றும் விரும்புமாறு விளங்க “விரும்பி நின்றார்” என விளம்புகின்றாள். வண்டு பூவின் தேனைப் பருகும். வதி - வண்டு. வதிதல் - தூக்குதல். பலி யேற்கும் வேடத்தராய் வந்தாரேனும் அவர் திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் என்று தெளிந்து கொண்டாளாதலின் “ஒற்றி வதிவார் என்றன் மனையடைந்தார்” என உரைக்கின்றாள். தண்டங் கழற்கு நிகரானீர், தண்டங்கு அழற்கு நிகரானீர்; நெருப்பாலாகிய தூண் போன்றீர்; அங்கு அழற்குத் தண்டு நிகரானீர் என வரும். தண்டம் - வணக்கம். கண்டு, சர்க்கரையுமாம். அறுத்தல் - வீழ்த்தல். கறுத்தல் - கரிய நிறத்ததாதல். கழற்குத் தண்டம் என்ற சொல்லைக் கேட்டு, அதன் நலம் பாராட்டுவாராய் “மொழியால் கண்டங் கறுத்தாய்” என்று சொல்ல, நான் அவரது கழுத்தின் கருமையைச் சுட்டி, “நீர் கண்டங் கறுத்தீ ரென்றேன்” என்று இயம்புகிறாள்.

     (6)