156.

    செழிக்கும் சீர்திருத் தணிகைத் தேவநின்
    கொழிக்கு நல்லருள் கொள்ளை கொள்ளவே
    தழிக்கொண் டன்பரைச் சார்ந்திலே னிவண்
    பழிக்குளாகு மென்பான்மை யென்னையோ.

உரை:

வளத்தாற் செழிக்கும் புகழ் பொருந்திய திருத்தணிகையில் எழுந்தருளும் முருகப் பெருமானே, நின்பால் மிக்குறும் நல்லருட் செல்வத்தைக் கொள்ளை கொள்ளும் பொருட்டு, அன்பராயின நன்மக்கள் நட்பைத் தழுவிக் கொண்டு அவரது திருக்கூட்டத்தைச் சேரா தொழிந்து, இங்கு வீண் பழிக்கு ஆளாகிய என் ஊழ்வினையை என்னென்பது! எ. று.

     திருத்தணிகை மலைவளத்தால் மேம்படுமாறு புலப்படச் “செழிக்கும் சீர்த்திருத்தணிகை” எனச் சிறப்பிக்கின்றார். கொழித்தல் - மிகுதல். கொள்ளை கொள்ளுதல் - தங்கு தடையின்றி வேண்டுமளவு எடுத்துக் கொள்ளுதல். அன்பு செய்யும் நன்மக்கள் அதனைப் பெறற்கு உரியவராரதலால் “அன்பரைத் தழிக் கொண்டு” என்றும், அவரது சார்பு நல்லருட் பேற்றுக்கு ஏதுவாதல் கண்டும் அதனைப் பெறாது நீங்கினேன் என்பாராய், “அன்பரைச் சார்ந்திலேன்” என்றும், அன்பர்களைச் சாராமையால் எய்திய கேடு இது என்று விளக்கலுற்று, இங்கு வீண் பழிக்கு ஆளாயினேன் என்றும் கூறுகின்றார். இதற்குக் காரணம் எனது ஊழ் வினை என்பாராய், “பழிக்கு ஆளாகும் என் பான்மை என்னையோ” என்கின்றார். பால்-ஊழ்வினை அதன் ஆட்சி பான்மையெனப் படுகிறது.

     இதனால், முருகன் அடியாரைச் சாராது பழிக்கு ஆளாவது என் ஊழ் வினைப் பயன் என்று தெரிவித்தவாறாம்.

     (6)