1560. விற்கண் டாத நுதன்மடவாள்
வேட்ட நடன வித்தகனார்
சொற்கண் டாத புகழொற்றித்
தூய ரின்றென் மனைபுகுந்தார்
நி்ற்கண் டார்கண் மயலடைவா
ரென்றார் நீர்தா நிகழ்த்தியசொற்
கற்கண் டாமென் றுரைத்தேனான்
கற்கண் டாமென் றுரைத்தாரே.
உரை: வில்லின் வனப்பால் உயர்ந்த நெற்றியையுடைய உமாதேவி விரும்பிக் காண ஆடும் கூத்து வல்லவரும், சொல்லுக்கு அடங்காத புகழை யுடைய திருவொற்றியூரின்கண் எழுந்தருள்பவருமாகிய தியாகப் பெருமான் இன்று என் மனையின்கண் பலி வேண்டிப் புகுந்து, என்னை நோக்கி நின்னைக் கண்டவர்கள் வேட்கை மயக்கம் உறுவரென்று சொன்னாராக, தேவரீர் சொல்லிய சொல்லே இனிமையால் கற்கண்டை ஒக்கும் என்று நான் சொன்னேன்; நாமும் கல்லைக் கண்டோம் என்று இயம்புகின்றார். எ.று.
மகளிர் நெற்றிக்கு வில்லை வுவமை கூறுவது மரபு. வளைந்த வில்லினும் மங்கையின் நெற்றி யழகு மிக்குள்ளமை விளங்க, “அண்டாத நுதல் மடவாள்” என வுரைக்கின்றாள். நுதல் - நெற்றி. என்றும் குன்றாத இளமையும் அழகும் உடையவளாதலின், உமாதேவியை “மடவாள்” என்று சிறப்பிக்கின்றாள். வேட்டல் - விரும்புதல். உமையாள் காண நின்று ஆடுகின்ற பெருமானாதலாலும், நடனக் கலையில் ஒப்புயர்வில்லாதவனாதலாலும், சிவபெருமானை “மடவாள் வேட்ட நடன வித்தகனார்” என்று புகழ்கின்றாள். சொற்கு அண்டாத புகழ் - சொல்லுக்கு அடங்காமல் விரிந்த புகழ். தூயன் - நின்மலன். மயல் - மயக்கம்; ஈண்டுக் காட்சி வேட்கையால் உளதாகும் மயக்கம். அவர் வழங்கிய சொல்லின் இனிமையை வியந்து, “சொல் கற்கண்டாம்” என்றாளாக, அவட்கு விடை கூறிய பெருமான் “கல் கண்டாம்” என்று கூறுகிறார். கல் - மலை; நினது மார்பின்கண் இரண்டு மலைகளைக் கண்டோம் என்பது அவர் குறிப்பு. (7)
|