1561. விடையார் கொடிமே லுயர்த்தருளும்
வேத கீதப் பெருமானார்
உடையா ரொற்றி யூரமர்ந்தா
ருவந்தென் மனையி லின்றடைந்தார்
இடையா வைய மென்றார்நா
னிடைதா னைய மென்றேனாற்
கடையா ரளியா ரென்றார்கட்
கடையா ரளியா ரென்றேனே.
உரை: எருதெழுதிய கொடியை வானில் உயர்த்தி வேதங்களை இனிய கீதமாகப் பாடுகின்ற பெருமானும், எல்லா வுலகுயிர்களையும் தமக்கு உடைமையாக உடையவரும், திருவொற்றியூரில் விரும்பி யுறைபவருமாகிய தியாகப் பெருமான், இன்று என் மனைக்கு விரும்பி வந்தவர், உலகியலாசை விடாது என்ற கருத்துப்பட வையம் இடையா என்று சொன்னாராக, நான் மகளிர் இடைதான் ஐயம் என்று சொன்னேன்; அவர் மறுமாற்றமாக கீழ்மக்கள் யாது மளிக்க மாட்டார் என்று பொருள் பட, கடையார் அளியார் என்று உரைத்தார்; நான் கடைக்கண் பார்வை யுடையார் அருள் உள்ளம் உடையவர் என்ற கருத்துப்பட, கட்கடையார் அளியார் என வுரைத்தேன். எ.று.
விடையார் கொடி - எருதுருவம் எழுதிய கொடி. வானளாவ எழுந்த கொடி என்பதற்கு “மேலுயர்த்தருளும் விடையார் கொடி” என விளம்புகிறார். எல்லா வுலகுகளையும் படைத்தருளிய நலம் பற்றிச் சான்றோர் சிவபெருமானை “உடையாய்” என்றும், “உடையவனே” என்றும் ஓதுதலின், வடலூர் வள்ளலாரும் அதனை மேற்கொண்டு “உடையார்” என உரைக்கின்றார். வேத மந்திரங்களைக் கீத நெறியில் பாடிக் காட்டிய பெருமையை விதந்து “வேத கீதப் பெருமானார்” என்று கூறுகிறார். பலிவேண்டி மனைக்கு வந்தபோது முகமலர்ந்து விளங்கினமை பின் “உவந்து அடைந்தார்” என்கிறாள். “இடையா வையம்” என்பதில் வைய மென்பது உலகியல் மக்கள் உள்ளத்தில் உண்டு பண்ணும் மயக்கத்தின் மேற்று. இடைதல் - கெடுதல். உலகில் மக்கட்குள் ஆண் பெண்ணை
யும் பெண் ஆணையும் கண்டு மயங்கும் மயக்கம் எளிதில் தோல்வி உறுவது அன்று என்பது தோன்ற “இடையா வையம்” என இசைக்கின்றார். அதனை உணராமல் நுண்மையால் மகளிர் இடைதான் ஐயத்துக் குரியது என்பாளாய், “நான் இடைதான் ஐயமென்றேனால்” எனக் கூறுகிறாள். இடையா வையம் என்பதை இடை ஆ ஐயம் என்று கொண்டு, நினக்கு இடை சிறுத்து உளதோ இலதோ என ஐயுறுமாறு உள்ளது என்று உரைப்பதாகக் கொண்டு, அவர் கருத்துக்கு உடன்படுவாள் போல, ஆம் இடைதான் ஐயத்துக்கு இடமாக வுளது என்பாளாய் “இடைதான் ஐயம்” எனச் சொல்லுகின்றாள். கடையார் - கீழ் மக்கள். அளித்தல் - அருள் செய்தல். கடையா ரளியார் என்றதற்கு, மனையின் கடைவாயிலில் நிற்பவர் ஒன்றும் கொடார் என்றதாகக் கருதிக் கொண்டு, கட் கடையால் நோக்குபவர் அருள் மிக வுடையர் போலும் என்பாளாய் “கட் கடையா ரளியார்” என்றேன் எனக் கூறுகிறாள். கட்கடை - கடைக்கண் எனவும் வழங்கும். ஈற்றிலுள்ள “அளியார்” என்பது அருள் உடையவர் என்னும் பொருட்டு. (8)
|