1562.

     நாடொன் றியசீர்த் திருவொற்றி
          நகரத் தமர்ந்த நாயகனார்
     ஈடொன் றில்லா ரென்மனையுற்
          றிருந்தார் பூவுண் டெழில்கொண்ட
     மாடொன் றெங்கே யென்றேனுன்
          மனத்தி லென்றார் மகிழ்ந்தமர்வெண்
     காடொன் றுடையீ ரென்றேன்செங்
          காடொன் றுடையே னென்றாரே.

உரை:

      நாடெங்கும் பரவிய புகழையுடைய திருவொற்றியூர் என்னும் நகரத்தின்கண் விரும்பி உறையும் தலைவரும், ஒப்புயர்வில்லாதவருமாகிய தியாகப் பெருமான், என் மனைக்கு வந்திருந்தபோது, பூவுலகை உண்டு அழகு மிக்குயர்ந்த விடை யொன்று உண்டே, அது எங்கே என்று கேட்டேனாக, அஃது உன் மனத்து உளது என்றார்; மேலும் நீவிர் உவகை மிக்கு எழுந்தருளும் வெண்காடு என்னும் பதியை உடையவர் அன்றோ என்று கேட்டேனாக, அதுவே யன்றிச் செங்காடும் உடையேன் என்று செப்புகின்றார். எ.று.

      “நாடொன்றிய சீர்” என்றற்கு, நாடெங்கணும் பரவிய புகழெனினும் அமையும். அஃதாவது, நம்பியாரூரர் சங்கிலியாரை மணந்த வரலாற்றுக்கு இடமாகிய சிறப்பு தமிழகமெங்கும் பரந்து நிற்பதாகலின், “நாடொன்றிய சீர்த் திருவொற்றி நகர்” என உரைக்கின்றாள். பிறப்பிறப்பில்லாமையால் சிவபெருமானுக்கு ஒப்பாகவோ உயர்வாகவோ ஒருவருமில்லாமையால் “ஈடொன்றில்லார்” என இயம்புகிறாள். பூவுண் டெழில் கொண்ட மாடு - பூ, இலை, தளிர் முதலியவற்றை மேய்ந்துண்டு சிறக்கும் எருது. பூ - பூமியுமாம். பூவுலகை உண்டுயர்ந்த திருமாலை “பூவுண் டெழில் கொண்ட மாடு” எனக் குறிக்கின்றாள் என்றுமாம். மால் என்பது மனத்தில் உளதாகும் மயக்கத்தையும் உணர்த்துவதாகலின் மாலாகிய மாடு எங்கே? என்றாட்கு. மயக்க மாகிய மால் உன் மனத்திலுளது என்கின்றார். வெண்காடு - சோழ நாட்டில் உள்ளதோர் திருப்பதி. செங்காடு - அந்நாட்டிலுள்ள பதிகளுள் ஒன்று. இதனைச் செங்காட்டங்குடியெனக் குறிப்பவருமுண்டு. செங்காடு என்ற பேர்கொண்ட ஊரும் தொண்டை நாட்டில் உளது.

     (9)