1565. இருந்தார் திருவா ரூரகத்தில்
எண்ணாக் கொடியார் இதயத்தில்
பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார்
புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்
விருந்தார் திருந்தார் புரமுன்தீ
விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்
தருந்தார் காம மருந்தார்இத்
தரணி இடத்தே தருவாரே.
உரை: திருவாரூரின்கண் இருப்பவரும், தன்னை விரும்பி நினையாத கொடியவர் மனத்தைச் சேராதவரும், கொன்றையின் பொன்போன்ற பூக்களால் தொடுக்கப்பட்ட பூமாலையை யணிந்தவரும், தமது புகழை விரும்பிப் போற்றுகின்றவர்பால் விருந்தாகச் செல்பவரும், அசுரர் மதில் மூன்றையும் முற்காலத்தில் எரித் தழித்தவரும், திருவொற்றியூரில் அன்பர் சூழ எழுந்தருள்பவரும், தமது மார்பின் மாலையைக் காதலிக்கும் மகளிர் வேட்கை நோய்க்கு மருந்தாகுபவருமான சிவபெருமான், இந்நில வுலகத்தே நமக்குத் திருவருள் இன்பம் தருவார், காண். எ.று.
திருவாரூர் நடுவண் அமைந்த திருக்கோயிலில் எழுந்தருளுவதால், “திருவாரூரகத்தில் இருந்தார்” என்றும், கோயிலிடத்தே யன்றி மக்கள் உள்ளத்திலும் இருப்பவராயினும், கொடுமை நிறைந்த மனத்தில் சேர்தல் இலராதலால், “எண்ணாக் கொடியார் இதயத்திற் பொருந்தார்” என்றும் இயம்புகிறாள். பொலன் - பொன். கொன்றைப் பூ பொன்னிறமுடையதாகலின், “கொன்றைப் பொலன் பூந்தார்” எனவும், அஃது அடையாள மாலையாதலின் “பூந்தார் புனைந்தார்” எனவும் புகழ்கின்றாள். புகழ்ந்தார் - அன்பு மிகுதியால் அருட் செயல்களை எடுத்தோதிப் போற்றும் மெய்யன்பர். மெய்யன்பர் என்றதில் புத்தின்பம் விளைய எழுந்தருளுவது புலப்பட “விருந்தார்” என்று கிளக்கின்றாள். அசுரர்களை யழித்து உலகுயிர்கட்கு வாழ்வு இன்பமுறச் செய்த அருட் செயலாதலால், “திருந்தார் புரம் முன் தீ விளைத்தார்” எனக் கூறுகிறாள். புரம் - மதில். எரித்தழித்த செயல், “தீவிளைத்தார்” எனக் குறிக்கப்படுகிறது. அடியவரும் அன்பருமாகிய சுற்றம் சூழ இருப்பது பற்றி, ஒற்றி இருந்தார் என்னாமல், “கிளைத்தார்” என்று கிளந்து கூறுகிறாள். தன்பாற் காதலுற்று வருந்தும் பெருந்திணை மகளிரின் வேட்கை நோயைச் சிவனது மார்பின் மாலை மருந்தாய்ப் போக்கும் திறம் விளங்க, “தரும் தார் காம மருந்தார்” என்றாள். காம நோயின் மருந்தாய்த் தரப்படும் தார் என்பது, “தரும் தார் காம மருந்தார்” எனவும் வாய்பாடு மாறிக் கூறப்படுகிறது.
இதனால், சிவனது மார்பின் மாலை காம மருந்தாகும் திறம் கூறியவாறாம். (2)
|