1566. தருவார் தருவார் செல்வமுதல்
தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
மருவார் தமது மனமருவார்
மருவார் கொன்றை மலர்புனைவார்
திருவார் புயனும் மலரோனும்
தேடும் தியாகப் பெருமானார்
வருவார் வருவார் எனநின்று
வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
உரை: கற்பகச் சோலை நிறைந்த இந்திரபோகம் முதலாய செல்வம் பலவற்றையும் தருபவரும், மரச்சோலை சூழ்ந்து நிற்கும் திருவொற்றியூரில் எழுந்தருள்பவரும், தன்னை மனத்தால் நெருங்காதவர் உள்ளத்தை யடையாதவரும், மணம் கமழும் கொன்றை மாலையை அணிபவரும், திருமகள் தங்கும் தோளையுடைய திருமாலும், தாமரையில் இருக்கும் பிரமனும் அடி முடி காணத் தேடி வருந்தும் சிவபிரானுமாகிய தியாகப் பெருமான், வருவார் வருவாரென்று வழிநோக்கி யிருந்தேனாயினும் இன்னும் வாரா ராயினர் காண். எ.று.
தருவார் செல்வம் - இந்திர வுலகத்துக் கற்பகச் சோலையில் இருந்து நுகரப்படும் போகம். தரு - மரம். மருவுதல் - சேர்தல். மருவார் - மருவுதல் இல்லாதவர். மருவார் கொன்றை என்பதில் மரு, நறுமணம். திரு - இலக்குமி.
இதனால், வரவு நோக்கி யிருந்த பெருந்திணை மங்கை பெருமானது வாராமை நினைந்து இரங்குதல் தெரிவித்தவாறாம். (3)
|