1567. வந்தார் அல்லர் மாதேநீ
வருந்தேல் என்று மார்பிலங்கும்
தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத்
தந்தார் அல்லர் தயைஉடையார்
சந்தார் சோலை வளர்ஒற்றித்
தலத்தார் தியாகப் பெருமானார்
பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும்
பரிசே தோன்றும் பார்த்திலமே.
உரை: சந்தன மரங்கள் பொருந்திய சோலைகளையுடைய திருவொற்றியூராகிய தலத்தின்கண் எழுந்தருளும் தியாகப் பெருமான் இன்னும் வந்தாரில்லை; பெண்ணே, நீ வருந்துவது ஒழிக என்று சொல்லி, தமது மார்பிற்கிடந்து விளங்கும் மாலையை நம் துயரம் நீங்கத் தருகின்றாரில்லை; அவர் அருள் மிகவும் உடையவர்தான்; பந்து போன்ற கொங்கை களையுடைய மகளிர்க்கு அவரால் தரப்படும் பரிசு யாதோ? ஒன்றும் யாம் காணேம். எ.று.
சந்து - சந்தன மரம். தலம் - இடம். வருகின்றிலர் என்பது துணிவுப் பொருள் தருதலின், வாரா தொழியார் என்னும் குறிப்புத் தோன்ற, “வந்தாரல்லர்” என்று இசைக்கின்றாள். மார்பின் மாலையை யணியின் அம்மார்பை அணைந்தது போலும் உணர்வு தோன்றி இன்பம் செய்தலின், “மார்பு இலங்கும் தம் தார் தந்தாரல்லர்” எனவும், வருந்தாதே என வாயாற் சொல்லிக் கையால் கொடுப்பது, செவிக் கின்பமும் உடற் கின்பமும் ஒருங்கு தருதலால், “மாதே நீ வருந்தேல் என்று” எனவும் இயம்புகிறாள். மாலை தந்தால் தனக்கு எய்தும் பயன் கூறுபவள், வேட்கை நோய் தணியும் என்ற கருத்தால், “அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தாரல்லர்” என வுரைக்கின்றாள். அல்லல் - வேட்கையால் உளதாகும் மனநோய். துன்பம் நீங்கிய வழி இன்ப வுணர்வு தோன்றி மெய்தளிர்ப்பித்தலின் “ஓங்க” என விதந்து மொழிகின்றாள். வருந்தேல் என மொழிவதும், மார்பின் தாரை நல்காமையும் சொல்லக் கேட்பவர், தியாகப் பெருமான் அருளுணர் வில்லாதவர் என்று கருதாமைப் பொருட்டு, அருளில்லாதவரல்லர் என்பாளாய், “தயை யுடையார்” எனச் சொல்லுகிறாள். மகளிர்பால் தயை யுடையவராதலால், மாலை தாராராயினும் வேறு பரிசேதேனும் நல்குவர்; அஃது இன்னதெனத் தெரிந்திலது என்பாள், “அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலம்” என மொழிகின்றாள்.
இதனால், மாலை தாராராயினும் பரிசு யாதேனும் நினைவுக் குறியாக அருளுவர் எனத் தேறி யிருந்தவாறாம். (4)
|