1568. இலமே செறித்தார் தாயர்இனி
என்செய் குவதென் றிருந்தேற்கு
நலமே தருவார் போல்வந்தென்
நலமே கொண்டு நழுவினர்காண்
உலமே அனைய திருத்தோளார்
ஒற்றித் தியாகப் பெருமானார்
வலமே வலம்என்அ வலம்அவலம்
மாதே இனிஎன் வழுத்துவதே.
உரை: தூண் போன்ற அழகிய தோளை யுடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருள் பவருமாகிய தியாகப் பெருமானுடைய வெற்றியே மேன்மை வாய்ந்தது; இங்கே என்னுடைய நற்றாயும், செவிலியுமாகிய தாயர் மனையின் புறத்தே போகாவாறு என்னைச் செறித்து விட்டனர்; யானும் இனி என்ன செய்வதென்று தெரியாமல் ஏங்கி யிருந்தேனாக, எனக்கு நலஞ் செய்பவர் போல என்பால் வந்து என்னுடைய பெண்மை நலத்தைக் கவர்ந்து கொண்டு யாரும் அறியாவாறு நீங்கிவிட்டார்; அதனால் உளதாகிய என் வருத்தம் பெரிது; இனி யான் என்ன சொல்லுவேன். எ.று.
எனது ஒழுக்கத்தையும் சொற் செயல்களையும் கண்ட தாய்மார்கள் பிறரறியின் தீதாம் எனக் கருதிப் புறம் செல்லாதவாறு மனையின்கண் சிறைப்படுத்தி விட்டாராக, அவரையே நினைந்து வருந்தி இருந்தேன் என்பாள், “இலமே செறித்தார் தாயரினி என் செய்குவ தென்றிருந்தேன்” எனவும், அந்நிலையில் தியாகப் பெருமான் போந்து அருள் செய்து நீங்கினன் என்பாளாய், “நலமே தருவார் போல் வந்து என் நலமே கொண்டு நழுவினர்” எனவும் நவில்கின்றாள். இற் செறிக்கப்பட்ட வழி, புறத்தே சென்று காதலொழுக்கம் புரிதற்கு இடமின்மை பற்றித் “தாயர் இலம் செறித்தார்” என்றும், செயலற் றொழிந்தமை புலப்படுத்தற்கு “இனி என்செய்குவது என்று இருந்தேன்” என்றும், தியாகப் பெருமான் மறையிற் போந்து செய்த அருள் பிரியார் என்ற கருத்தை உள்ளத்தில் தோற்றுவித்தமையின் “நலமே தருவார் போல் வந்து” என்றும், பின்னர் வந்து கூடி மகிழ்விக்காமையால் மேனி மெலிந்து வேறு பட்டமை புலப்பட, “என் நலமே கொண்டு நழுவினர் காண்” என்றும் எடுத்துரைக்கின்றாள். “நழுவினர்” என்பது, பெருமான் பிரிந்து சென்றவர் வந்து கூடாமை உணர நின்றது. கேட்கும் தோழி உள்ளத்தில் பெருமான் கொண்டு தலைக்கழிதற் கேற்ற தோளாற்றல் உடையவரல்லர் போலும் என நினையாமைப் பொருட்டு “உலமே அனைய திருத்தோளார்” என வுரைக்கின்றாள். யான் நலமிழந்து அவலிக்கின்றேனாயினும் நுகர்ச்சிக் கண் அவர் வெற்றி மிக்கவர் என்பது விளங்க “பெருமானார் வலமே வலம்” என்றும், யான் உறுவது மிக்க துன்பம் என்றற்கு “என் அவலம் அவலம்” என்றும் இயம்புகிறாள். இதன்மேல் பேசுதற்குப் பொருளின்மை பற்றி “இனி என் வழுத்துவதே” எனக் கூறுகிறாள். மாதே என்றது தோழியை.
இதனால், இற்செறிப்பால் கூட்டம் எய்தற்கு இடமின்மை நினைந்து வருந்தியவாறாம். (5)
|