1569. வழுத்தார் புரத்தை எரித்தார்நல்
வலத்தார் நடன மலரடியார்
செழுத்தார் மார்பர் திருஒற்றித்
திகழுந் தியாகப் பெருமானார்
கழுத்தார் விடத்தார் தமதழகைக்
கண்டு கனிந்து பெருங்காமம்
பழுத்தார் தம்மைக் கலந்திடநற்
புதத்தார் என்றும் பார்த்திலரே.
உரை: பகைவரான அசுரர்களின் மதில் சூழ்ந்த நகரத்தை எரித்து அழித்தவரும், நல்ல வெற்றி யுடையவரும், ஞான நடம் புரியும் பூப்போன்ற திருவடியை உடையவரும், வளவிய கொன்றை மாலையை யணிந்த மார்பை யுடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகப் பெருமானும், விடம் தங்கிய கழுத்தை யுடையவருமாகிய சிவபெருமான், தமது திருமேனி யழகைக் கண்டு காதற்காமம் மிகுந்துள்ள மகளிரைக் கூடி யின்புறுத்தும் நல்ல செவ்வி உடையராயினும், அவர்களை எப்பொழுதும் பாரா திருக்கின்றார். எ.று.
வழுத்தார் - பகைமை உணர்வால் போற்றாதவர். முப்புரத்தசுரர். சிவன்பால் பகைமை உற்று உலகிறகுத் தீங்கு செய்தொழுகினமையின் அவர்களை “வழுத்தார்” என்று குறிக்கின்றார். அவர்கள் இருந்து தீது புரிந்து போந்தது மூன்று மதில்களால் சூழப்பட்ட நகரமாதலின், அது திரிபுரம் எனப்படுகிறது. அதனைத் தனது நகைப்பிற் பிறந்த தீயால் சிவன் எரித்தழித்தமையின் “புரத்தை எரித்தார்” என்று புகல்கின்றார். பகைவர் அனைவரையும் எஞ்சாமல் வென்று மேம்பட்டதுபற்றிச் சிவனை “நல்வலத்தார்” என்று கூறுகின்றாள். அம்பலத்தின்கண் நின்று திருக் கூத்து ஆடுபவராயினும் சிவனது திருவடி மலர்போல் மென்மையும் அழகும் கொண்டு திகழ்தலின் “நடன மலரடியார்” என நவில்கின்றாள். செழுந்தார் என்பது எதுகை நயம் பற்றி “செழுத்தார்” என வலித்தது. தார் என்றது, ஈண்டுச் சிவனுடைய அடையாள மாலையாகிய கொன்றை மாலையை என்க. சிவனுடைய பொன்னிற மேனியில் விடம் தங்கிய கழுத்து நீலமணிபோல் நிறமும் உருவும் கொண்டு திகழ்தலால் “கழுத்தார் விடத்தார்” என்கின்றாள். கழுத்திற் பொருந்திய விடத்தை உடையவர் என்பது இதன் பொருள். பெருந்திணை மகளிரின் உள்ளத்தில் பெருங்காமக் காதல் கிளர்ந்து நிற்பது கண்டு, “அழகைக் கண்டு கனிந்து பெருங்காமம் பழுத்தார்” எனப் பகர்கின்றாள். அவர்களைக் கூடி மகிழ்வித்தற்கு ஏற்ற காலமும் இடமும் வாய்ப்பினும், அவர்களைக் கூடாது ஒழிகின்றார் என்பாள், “பெருங்காமம் பழுத்தார் தம்மைக் கலந்திட நற்பதத்தார்” என்றும், செவ்வி வாய்த்தும் கூடக் கருதுகின்றாரில்லை என்றற்கு “என்றும் பார்த்திலர்” என்றும் மொழிகின்றாள். கூற்று நிகழ்த்தும் நங்கையும் பெருந்திணை மகளாதலின், இது “தன்னைப் பிறர் போற்” கூறும் கூற்றாம் எனக் கொள்க. பதம், காலமுமாம்.
இதனால், கூடுதற் கேற்ற செல்வி கிடைத்தும் தியாகப் பெருமான் தன்பால் வந்து கூடாமை சொல்லி வருந்தியவாறாம். (6)
|