157.

    என்னை யென்னையீ தென்றன் மாதவம்
    முன்னை நன்னெறி முயன்றிலேனை நின்
    பொன்னை யன்னதாள் போற்ற வைத்தனை
    அன்னை யென்னும் நல்தணிகை யண்ணலே.

உரை:

     தாயாய்த் தலையளிக்கும் நல்ல தணிகைத் தலைவனே, முன்னைக் காலங்களில் நன்னெறிக் கண் செல்லாத என்னை நின்னுடைய அழகிய திருவடிகளைப் போற்றிப் புகழச் செய்தருளினாய்; இந்த என் பெரிய தவத்தை என்னென்று சொல்லுவேன்! எ. று.

     தன்பால் அன்பு செய்து வாழ்வாரையே யன்றிப் பிறரையும் அருள் புரிந்து ஆதரிப்பதுபற்றி அன்னையெனச் சிறப்பிக்கப்படும் முருகப் பெருமானை “அன்னையென்னும் நல் தணிகை யண்ணலே” எனப் புகழ்கின்றார். முன்னை- முற்காலம்; கழிந்த காலம் என்றுமாம். நல்வழி யறிந்து நலம் பெற முயலாத என்னை நினது திருவடி நலத்தை யுணர்ந்து அதனை யடைந்துய்யுமாறு நன்கு நினைந்து போற்றிப் பரவி வாழச் செய்தாய் என்பாராய், “முன்னை நன்னெறி முயன்றிலேனை நின் பொன்னையன்ன தாள் போற்றவைத்தனை” என்று கூறுகின்றார். பொன்-அழகு. பொன்னின் நிறத்தையும், சிவபோகம் நல்கும் நலத்தையும் உடையதாதலால் திருவடியைப் “பொன்னையன்னதாள்” என்று புகல்கின்றார். “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்” (பெண்ணாகடம்) என்று திருநாவுக்கரசர் பாடுவர். திருவடியை விடாது பற்றிப் போற்றுவது தவவினை; “தவமும் தவமுடையார்க் காகும்” (குறள்) என்பதனால், “என்னை என்னை ஈது என்றன் மாதவம்” என வியக்கின்றார். அடுக்கு, வியப்புக் குறித்தது. ஈது, பொருளொடு புணராச் சுட்டு. ஈது என்னையென நிறுத்தி, என்றம் மாதவம் என்பதை விடையாகக் கொள்வதும் பொருந்தும்.

     இதனால் தணிகை முருகப் பெருமானைப் போற்றிப் பரவும் தமது நல்வினைப் பயனை வியந்து கூறியதாம்.

     (7)