1570.

     பாரா திருந்தார் தமதுமுகம்
          பார்த்து வருந்தும் பாவைதனைச்
     சேரா திருந்தார் திருஒற்றித்
          திகழுந் தியாகப் பெருமானார்
     வாரா திருந்தார் இன்னும்இவள்
          வருத்தங் கேட்டும் மாலைதனைத்
     தாரா திருந்தார் சலமகளைத்
          தாழ்ந்த சடையில் தரித்தாரே.

உரை:

      திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் தியாகப் பெருமான் தமது திருமுகத்தை இவள்பால் திருப்பிப் பார்க்கின்றாரில்லை. தமது முகத்தை நோக்கிக் காதல் மேலிட்டு வருந்தும் பாவைபோன்ற இவளைக் கூடாமலிருக்கின்றார்; அன்றியும் இவள்பால் அவர் இன்னும் வருவதுமில்லை; இவள் எய்தி வருந்தும் வேட்கைத் துன்பத்தைக் கேள்வியுற்றும் தமது மார்பின் மாலையைத் தருகின்றாருமில்லை; மகளிரை விரும்பாரோ எனின் முதுகிடத்தே தாழ்ந்து கிடக்கும் முடிச்சடையின்கண் கங்கையாகிய பெண்ணைக் கொண்டிருக்கின்றார். எ.று.

     பெருந்திணை நங்கையின் துயர் கண்டு ஆற்றாத தாயர், பெருமான் அடித்தொண்டரிடம் முறையிடுகின்றார்களாதலால், அருள் நாட்டம் கொண்டு இப் பாவை போல்வாளை நோக்குகின்றாரில்லை என்கின்றார்களாதலின், “பாரா திருந்தார்” என எடுத்து மொழிகின்றார்கள். அவர் பாராது ஒழியினும் அவரது அருள்முகத்தை நோக்கி மெலிகின்றமை கண்டேனும் அவளைச் சேர்தல் வேண்டும்; அதனை அவர் செய்திலர் என்பாளாய், “தமது முகம் பார்த்து வருந்தும் பாவைதனைச் சேராதிருந்தார்” என்று தெரிவிக்கின்றார்கள். அது கேட்ட தொண்டர்கள், திருவருளை வேண்டுவார்க்கு வேண்டியாங்கு விரைந்து வழங்குவர் என உரைத்தார்களாக, அவர் இன்னும் அதனைச் செய்திலர் என்பாராய் “இன்னும் வாராதிருந்தார்” எனத் தாயர் உரைக்கின்றார்கள். நீவிர் கூறுதற்கு மாறாக இவள் வேட்கை மிகுந்து எய்தும் மெலிவினை எம்போல்வார் எடுத்துரைப்பக் கேட்டும், வாராமையை யன்றி, வருத்தம் தணிக்கும் தமது மாலையையும் தாராமை மேற்கொண்டுள்ளார் என்பாராய், “இவள் வருத்தம் கேட்டும் மாலைதனைத் தாராதிருந்தார்” என்றும், ஒருகால் தியாகப் பெருமான் மகளிரை விழையா உள்ளம் உடையவர் போலும் என எண்ணற்கும் இடமில்லை; கங்கையாகிய பெண்ணைத் தமது திருமுடிச் சடையின்கண் வைத்திருக்கின்றாராகலான் என்பார், “இவள் வருத்தம் கேட்டும் மாலைதனைத் தாராதிருந்தார் சலமகளைத் தாழ்ந்த சடையில் தரித்தார்” என்றும் இயம்புகின்றார்கள். சலமகள் - கங்கை.

      இதனால், மகள் மெலிவு கண்ட தாயர் சிவத் தொண்டர்பால் முறையிட்டவாறாம்.

     (7)