1572. உளத்தே இருந்தார் திருஒற்றி
யூரில் இருந்தார் உவர்விடத்தைக்
களத்தே வதிந்தார் அவர்என்றன்
கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம்
இளத்தே மொழியாய் ஆதலினால்
இமையேன் இமைத்தல் இயல்பன்றே
வளத்தே மனத்தும் புகுகின்றார்
வருந்தேன் சற்றும் வருந்தேனே.
உரை: கடலிடத்துப் பிறந்த அமுதம் போன்ற மெல்லிய இனிய தேன் போன்ற சொற்களைப் பேசும் தோழி, மெய்யன்பர் உள்ளத்தில் இருப்பவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவரும், உவர்க்கின்ற விடத்தைக் கழுத்தில் கொண்டவருமான தியாகப் பெருமானாகிய அவர் என் கண்ணில் இருக்கின்றாராதலின், இனிக் கண்கள் இமையேன்; இமைத்தலும் முறையாகாது; வளவிய என் மனத்தின் கண்ணும் புகுகின்றாராதலால் நான் சிறிதும் வருத்தமுறேன். எ.று.
தன்னை நினைப்பவர் உள்ளத்தில் நிலைபெற வீற்றிருப்பவராதலின், தியாகப் பெருமானை “உளத்தே இருந்தார்” என வுரைக்கின்றாள். உவர்ப்புச் சுவையுடையதாகலின் “உவர் விடம்” எனப்படுகிறது. உவர் நீர் நிறைந்த கடலிடத்துப் பிறந்த விடம் எனினும் பொருந்தும். களம் - கழுத்து. என் கண்ணிடமாகக் காதலர் உறைதலின் இமைத்தவழி அஃது அவரை மறைக்கும் என்பாள், “அவர் என்றன் கண்ணுள் வதிந்தார்” ஆதலினால் “இமையேன்” என்றும், இமைத்தவழி யஃது அவர்க்கு வருத்தம் விளைவிக்குமாதலின், இமைப்பது முறையாகாது என்பாளாய் “இமைத்தல் இயல்பன்றே” என்றும் இயம்புகிறாள். “இமைப்பின் கரப்பார்க்கு அறிவல்” என்றும், “இமைப்பின் பருவரார் நுண்ணியர் எம் காதலவர்” என்றும் திருக்குறள் ஓதுவது காண்க. எனது காதலுள்ளத்தில் எழுந்தருளி இனிது இருக்கின்றாராதலால், அவர் கூட்டம் நினைந்து வருந்துதற்கு இடமில்லாமையால், நான் வருந்துவது செய்யேன் என்பாள் “வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே” என இயம்புகிறாள். 'வளத்தே மனம்' என்றவிடத்து, ஏகாரம் அசை. வளத்து மனம், இன்ப நினைவுகளால் வளமுடைய மனம். மனத்தும் என்றவிடத்து, உம்மைக் கண்ணிடத்தே யன்றி மனத்திடத்தும் புகுகின்றார் எனப் பொருள் தருதலால், எச்சம்.
இதனால், பெருந்திணை நங்கையின் பேராக் காதல் புலப்படுத்தவாறாம். (9)
|