1576. கடுத்தாழ் களத்தார் கரித்தோலார்
கண்ணால் மதனைக் கரிசெய்தார்
உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை
ஒளித்தே தொண்ட னொடும்வழக்குத்
தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித்
துதிக்க ஒருகால் அம்பலத்தில்
எடுத்தார் அன்றோ மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே.
உரை: விடம் தங்கிய கழுத்தை யுடையவரும், யானைத் தோலைப் போர்த்தவரும், அதனையே உடுத்தவரும், நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துக் கரியாக்கினவரும், முன்னொருகால் தொண்டராகிய நீலகண்ட நாயனார்பால் மண்ணோடு ஒன்றை வைத்து மறைத்துப் பின்பு அவருடன் வழக்காடியவரும், வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் பாராட்டித் துதிக்க அம்பலத்தில் ஒருகாலையூன்றி ஒருகாலைத் தூக்கி யாடியவருமாவரன்றோ சிவபெருமான்; மகளே, அவரையேன் நீ காதலிக்கின்றாய். எ.று.
கடு - கடல் விடம். களம் - கழுத்து. யானையின் தோலை யுரித்துப் போர்வையாகவும் ஆடையாகவும் உடுப்பது விளங்க, “கரித்தோலார் உடுத்தார்” என வுரைக்கின்றார்; கரிய யானையொடு பொருது அதற்குத் தோல்வி யுறாது வென்று அதன் தோலை யுரித்தெடுத்து உடுத்துக் கொண்டார் எனினும் அமையும். கரி செய்தலாவது - தீயால் வெந்து கரியச் செய்தல். ஒளித்தல் - மறைத்தல். சிவனடியார்க்கு மண்ணோடு செய்துதவும் தொண்டினைச் செய்ததுபற்றி, நீலகண்ட நாயனாரைத் “தொண்டன்” எனக் குறிக்கின்றார். தில்லைப் பொதுச் சபையில் ஓடு வேண்டி வழக்காடிய வரலாறு “தொண்டனொடும் வழக்குத் தொடுத்தார்” என நினைக்கப்படுகிறது. வியாக்கிரபாத முனிவர் புலிக்காலும், பதஞ்சலியார் பாம்பின் காலும் உடையராதலின், இருவரையும் புலியும் பாம்பு மெனக் கூறுகின்றார். இருவரின் வேண்டுகோட் கிசைந்து தில்லையம்பலத்தில் ஒருகாலை முயலகன் மேல் ஊன்றி நின்றும், ஒருகாலை எடுத்தும் ஞானக் கூத்தாடியது பற்றி, “ஒருகால் அம்பலத்தில் எடுத்தார்” என்று உரைக்கின்றாள். இப்பெற்றியார் மகளிர் காதலுறவுக்கு ஆகாதவரென்பாளாய், “மகளே நீ ஏதுக்கவரை விழைந்தனை” என ஏசுகின்றாள். (3)
|