1577.

     உரப்பார் மிசையில் பூச்சூட
          ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
     கரப்பார் மலர்தூ வியமதனைக்
          கண்ணால் சுட்டார் கல்எறிந் தோன்
     வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க
          வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
     இரப்பார் அன்றோ மகளேநீ
          ஏதுக் கவரை விழைந்தனையே.

உரை:

      வன்மை கொண்ட நிலவுலகில் மலரும் பொய்ப் பூவெனப் படும் கைதையைச் சூடிக் கொள்ளாராய், முடிச்சடையின்கண் கங்கையாகிய பெண்ணை மறைத்து வைத்திருப்பவரும், மலரம்புகளைத் தன்மேல் எறிந்த மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தழித்தவரும், கற்களால் அருச்சனை செய்த சாக்கிய நாயனார்க்கு மேலுலகின்கண் இனிதிருக்க வாழ்வளித்தவரும், உண்பலி வேண்டி வீடு தோறும் சென்று இரப்பவரும் சிவபெருமானன்றோ? மகளே, நீ அவரைக் காதலிப்பது என்னை. எ.று.

     “மண் திணிந்த நிலம்” எனச் சான்றோர் கூறுதலால், நிலவுலகை “உரப்பார்” என வுரைக்கின்றார். உரம் - திண்மை. இல்லது கூறிய பூ, இல்பூ. கைதை மலர் (தாழம் பூ) சிவன் திருமுடியைக் கண்டதாகப் பிரமன் சொன்னதை வலியுறுத்தற்குப் பொய்ச்சான்று கூறியதால் கைதை மலரை, இல் பூ எனவும், பொய்ப் பூ வெனவும் புராணம் கூறுவதால், “இல்பூச் சூட வொட்டார்” என இயம்புகிறாள். இலமரத்தின் பூவும் சிவனுக் காகாதென விலக்கப்படுவதால், இல்பூ என்பதற்கு இல்லப்பூ என்றலும் ஒன்று. இலமரம், இலவமரம் என வழங்கும். சடை முடியில் உள்ள கங்கை புறத்தே விளங்கத் தோன்றாமையால் “சடைமேல் ஒரு பெண்ணைக் கரப்பார்” என இசைக்கின்றார். கரத்தல் - மறைத்தல். அசோகு முதலிய பூக்களே மன்மதனுக்கு அம்பாதலின், “மலர் தூவிய மதன்” எனப்படுகின்றான். கற்களை மலராகக் கருதி அருச்சித்தாராகலின், சாக்கிய நாயனாரைக் “கல்லெறிந்தோன்” எனக் குறிக்கின்றாள். வரப்பார் - மேலுலகம்; “வரன் என்னும் வைப்பு” (குறள்) என்பர் திருவள்ளுவர். சிவலோகம் தேவருலகுக்கும் மேலதாதலால் “வரப்பார் மிசை” என்று கூறுகிறாள். “மனமுலாமடியார்க் கருள் புரிகின்ற வகையலாற் பலிதிரிந் துண்பிலான்” (ஞான. இலம்பை) எனச் சான்றோர் கூறுவவாயினும், இதழ்தல் வேண்டி, “பலிக்கு மனைதொறும் போய் இரப்பாரன்றோ” எனவுரைக்கின்றாள். இத்தகைய சிவனைக் காதலிப்பது இன்பமில் செயலாதலின், வேண்டாவென விலக்குவாளாய், “மகளே, நீ ஏதுக் கவரை விழைந்தனையே” என்று விளம்புகின்றார்.

     இது, தலைவனைப் பழித்துத் தாய் மகளை விலக்குதல் எனவும் கூறப்படும்.

     (4)